பக்கம்:முந்நீர் விழா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

45

 அதற்குள் அருகில் இருந்த அமைச்சன் ஒருவன், 'தம்முடைய தொழிலைப் பற்றி இப்படி யாவரும் சொல்லிக் கொள்வது வழக்கம். ஒரே நாளில் இரண்டு ஊர்களில் வித்தை காட்டுவது இல்லையா?” என்றான்.

கழைக்கூத்தியின் தகப்பன், "வீதியிலே குரங்கை வைத்து ஆடுகிற விளையாட்டு அன்று இது. இதுவும் ஒருவகை யோக சாதனை” என்றான்.

அமைச்சன், "மன்னர் பெருமான் ஏவலை மறுக்கும் துணிவு இங்கே யாருக்கும் இல்லை” என்று கடுங்குரலில் சொன்னான்.

பாண்டியன் ஒன்றும் பேசவில்லை. எதிர் நின்ற கழைக்கூத்தனும் ஒன்றும் சொல்ல இயலாமல் தடுமாறினான். அப்போது அந்தப் பெண்ணே பேசத் தொடங்கினாள்; தன் தகப்பனை நோக்கித்தான் பேசினாள்.

"அப்பா, மன்னர் மன்னருக்குப் பாண்டி நாட்டுக் குடிமக்கள். உயிரைப் பாதுகாப்பது தான் கடமை போலிருக்கிறது. தொண்டை நாட்டிலிருந்து வந்து பாண்டி நாட்டுத் தெய்வமாகிய மீனாட்சிக்கு என் உயிரைப் பலியாகக் கொடுக்கவேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால், அதை மாற்றமுடியுமா? நான் மறுபடியும் கம்பத்தின் மேல் ஏறுகிறேன். ஆனால்-"

பாண்டியன் அவள் பேச்சைக் கேட்டுப் பிரமித்துப் போன்னான். அது பேச்சாக இருக்கவில்லை; சாட்டையை எடுத்துப் பளீரென்று விலாவில் வீசியதுபோல இருந்தது. அரசனால் பேசமுடியவில்லை. அவள் இன்னும் பேச்சை நிறுத்தவில்லை. 'ஆனால்'- என்று இழுத்தவள் சற்றே மெளனமாக நின்றாள். வானத்தைப் பார்த்தாள். ஏதோ சொல்லத் தொடங்கினாள். . . . -

இது என்ன! அவள் ஏதோ கவியை அல்லவா சொல்கிறாள்? சொல்லும்போதே தடுமாறுகிறாளே! ஆ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/54&oldid=1207492" இலிருந்து மீள்விக்கப்பட்டது