54
முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
குறிப்பிட்டு, கோஷ்டிகள் என்பதற்கு விளக்கம் கூறும்போது, “எந்தக் கோட்பாட்டின் மூலமும் செயல்படாத, மாறாத, ஏதோ அரசியல் நோக்கத்தை அல்லது சொந்த லாபத்தை அடையவே விரும்புகின்ற மனிதர்களின் கும்பலாகும்” என்றும் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டார், எனவே உடனடியான கடமைகளில் ஒன்று எழுத்தாளர்களின் கட்சியுணர்வை வலுப்படுத்துவதே யாகும் என்றும் கூறினார். இதேபோல் “நூறு பூக்கள் மலரட்டும்” என்ற கோஷத்துக்கு விளக்கம் கூறப்புகுந்த செளயாங் என்ற மற்றொரு விமர்சகர், “இந்தக் கோட்பாடு திட்டவட்டமான வரலாற்று நிலைமைகளில் முன்வைக்கப்பட்டது; தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயகச் சர்வாதிகாரம் பெருமளவில் வலுப்படுத்தப்பட்டு விட்டது; முதலாளித்துவத்தின் பொருளாதார அடிப்படை உண்மையில் ஒழிக்கப்பட்டு விட்டது; அறிவாளிகளைச் சித்தாந்தரீதியில் மாற்றி உருத்திரட்டும் காரியம் நடைமுறைக்கு வரத்தொடங்கி விட்டது” என்று எழுதினார் (Chinese Literature, எண் 1/58). சீன நாட்டிலும் இலக்கியத்தில் கட்சியுணர்வு என்பது இவ்வாறு வலியுறுத்தப்பட்டதன் விளைவாக, அங்குத் தோன்றிய கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில் என்னென்ன விபரீத விளைவுகளெல்லாம் நேர்ந்தது, எழுத்தாளர்கள் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்பது நாம் பின்னர் தெரிந்து கொண்ட விஷயங்களாகும். ஆயினும் நாம் சோவியத் நாட்டையும் சீனாவையும் பார்த்து, நம் நாட்டில் இலக்கிய அணியைக் கட்டியமைக்க முற்பட்ட காலத்தில், நமது நோக்கில் இந்த ஜாதனோவிசமே மேலோங்கியிருந்தது. என்றாலும், 1961 மத்தியில் நாம் கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்த காலத்தில், நாம் இந்த ஜாதனோவிசப் போக்கின் எச்சமிச்சங்களையும் போக்கி, முற்றிலும் அதிலிருந்து விடுபட்டு விட்டோம் எனலாம். ஆனாலும், இதிலிருந்து விடுபடுவதற்காக, குறிப்பாக ஐம்பதாம் ஆண்டுகளில் பிற்பகுதியில், இலக்கியத் துறையில் ஈடுபட்டிருந்த தோழர்கள்