பக்கம்:முல்லைக்கொடி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 107.

கடல் இடையே நின்று, அக் கடல் நீரை இரு பக்கங்களிலும் ஒதுக்கிவிட்டு, இடையே நிலங் கண்ட காட்சிபோல் தோன்றிற்று. நிற்க.

என்றும் தம் பின்நின்று தம்மை ஒட்டிவரும் இயல்பினராய ஆயர், தம்மிடையே புகக் கண்ட, அந்நிரையைச் சேர்ந்த சில ஏறுகள் கடுஞ் சினம்கொண்டு அவ்வாயர் மீது பாய்ந்தன; அஞ்சி ஓடியவர்களின் பின் ஓடி, அவரைக் கீழே வீழ்த்தி மிதித்தன. ஓடாது எதிர்த்து நின்றவரைக் கூரிய தம் கோடுகளால் குத்திப், பட்டி வாயிலில், உழலைகளைக் கோக்கத் துளையிட்டு நாட்டியிருக்கும் மரங்களைப் போலாகுமாறு, அவர் உடலைத் துளைத்தன.

ஆயர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தினா ரல்லர்; கோடுபட்டுப் புண்ணாகிய தம் உடல்களிலிருந்து ஒழுகும் இரத்தக் கறை படிந்து, கைகள் வழுக்குவது கண்டு, அது போக, மண் எடுத்துக் கைகளை நன்றாகத் திமிர்ந்து கொண்டு, சிறிதும் தாழ்த்தாது, கடல் மேற் செல்லும் பரதவர் கட்டுமரங்கள் மீது ஏறிச் செல்வதுபோல், காளைகள்மீது பாய்ந்து ஏறி, அவற்றை அடக்கி ஒட்டினர். இவ்வாறு தத்தமக்குரிய ஆனிரைகளை அறிந்து பிரித்துக் கொண்டு, அவற்றைத் தங்கள் தங்கள் தொழுவங்களில் அடைத்துவிட்டு மகிழ்ந்து தம் மனை புகுந்தனர்.

ஊர் மன்றில், காளைகள் குத்திச் சரித்த குடர் களைப் பருந்துகள் பற்றிக் கொண்டு பறந்து செல்லுங்கால், அக்குடர்களில் சில, அவற்றின் அலகுகளினின்றும் வழுக்கி வீழ்ந்து, ஆங்குள்ள ஆலமரக் கிளைகளிலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/109&oldid=707953" இலிருந்து மீள்விக்கப்பட்டது