பக்கம்:முல்லைக்கொடி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஆ. புலவர் கா. கோவிந்தன்

விளைவுகளை உண்டாக்கி விடுமோ? அவளைக் காதலிப்பவன் யாவனோ? அவன் நல்லவனாக இருப்பானோ? ஆயர்குல வழக்கப்படி ஏறு தழுவும் ஆற்றல் அவன்பால் அமைந்திருக்குமோ? மகள் காதலித்த அவனுக்கே, இவள் தந்தை இவளை மணம் செய்து தருவனோ? என்ற ஐயங்கள் அடுக்கடுக்காக அவள் மனதில் எழவே, சிறிதே நடுங்கி விட்டாள். நெருப்பை அறியாது தொட்டவர், அந்நெருப்பு கையைச் சுட்டதும், நடுநடுங்கிக் கைகளை உதறிக் கொள்வதுபோல், அவள் உடல் முழுதும் ஒரு சிறிது நேரம் நடுங்கிற்று, புறக்கடைப் பக்கம் போய் விட்டாள்.

அப் பெண் தலை குனிந்தவள் குனிந்தவளே! இதன் விளைவு என்னாமோ என அஞ்சிற்று அவள் உள்ளம். விரித்த கூந்தலை முடித்துக் கொண்டாள்; நிலம்வரை நீண்டு தொங்கிய தன் நீல ஆடையைக் கைகளால் பற்றித் துரக்கிப் பிடித்துக் கொண்டாள்; அச்சத்தால் உடல் நடுங்க, மெல்ல அடிமேல் அடி வைத்து நடந்து, மனைக்கு அணித்தாக இருந்த, எவராலும் அறிந்து கொள்ள இயலாத குறுங்காட்டிற்குள் புகுந்து ஒளிந்து கொண்டாள். நிற்க.

மகள் மனநிலையை உணர்ந்து கொண்ட தாய் அவள் தோழியை அழைத்து, அவள் காதல் விளையாட்டு அனைத்தையும் அறிந்து கொண்டாள்; அவள் காதலன் நல்லவன் என்பதையும் அறிந்து கொண்டாள். உடனே, கணவனையும் மக்களையும் கூட்டி, அவர்க்கு மகள் காதலைக் கூறி, அவள் திருமணத்திற்கு இசைய வைத்தாள். அவரும் இசைந்து, அதற்கு வேண்டியவற்றை விரைவில் முடிக்க முனைந்தனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/180&oldid=708024" இலிருந்து மீள்விக்கப்பட்டது