பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கினான். கி.பி. 1712 ல் விஜயரங்க சொக்கநாதர் திருநெல்வேலியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினுக்கு ஈழம்பூர், ரஹ்மத்பூர், லக்ஷிமிபூர், அணைக்கரை, அந்தராயம், நெல்லையம்பலம் ஆகிய ஆறு ஊர்களை பள்ளிவாசல் தருமமாகக் கொடுத்தார். அந்த மன்னர், கி.பி. 1692ல் திருநெல்வேலியில் உள்ள இன்னொரு பள்ளிக்கும் கி.பி. 1633ல் கீழப்புலியூர் சையது பக்கீர்தின் தர்காவிற்கும் நிலக்கொடைகள் வழங்கியுள்ளார்.[1] மதுரை மன்னர் சொக்கநாதரது மனைவி ராணி மங்கம்மாள் திருச்சியில் மோனத்துயில் கொள்ளும் நத்தர் (வலி) அவர்களிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவரது தர்காவின் பராமரிப்பிற்காக சில நிலங்களை கி.பி. 1701ல் தானமாக வழங்கினார். இந்த அரசியார், பெனு கொண்டாவில் உள்ள பாபா தர்காவிற்கும் நிலக்கொடைகள் வழங்கி உள்ளார். இவரைப் போன்று ராணி மீனாட்சியும் பள்ளிவாசல்களுக்கு நிலக் கொடைகள் அளித்துள்ளார்.[2] மதுரை நாயக்க மன்னர்களைப் போன்று தஞ்சாவூர் நாயக்கர்களும் தமிழக இசுலாமியரை அன்புடனும் ஆதரவுடனும் நடத்தி வந்தனர் எனத் தெரிய வருகிறது.

இத்தகைய அரசியல் ஊக்குவிப்புகளினாலும் சலுகைகளினாலும் பயனடைந்த இசுலாமிய சமூகத்தினருக்கும் இசுலாமியரைப் போன்று வெளியே இருந்து வந்து தமிழ் மண்ணில் நிலைத்துவிட்ட நாயக்கர் சமூக மக்களுக்கும் இடையில் நல்லெண்ணமும் நட்புறவும் வளர்ந்தது. இரு சமூக மக்களும், ஒரே குடும்பத்தினரைப்போன்று அன்புடன் நடந்து கொண்டனர். குறிப்பாக,தென் மாவட்டங்களில்,இன்று ஒரு முஸ்லிமும் நாயக்கரும் சந்தித்துக் கொண்டால் அவர்கள் ஒருவரையொருவர் அன்னியோன்னியமாக அழைத்துக் கொள்வது "மாமா” என்ற அன்புச் சொல்லினால்தான். முன்னுாறு ஆண்டு கால வரலாற்றில் எவ்வளவோ அரசியல் மாறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், தமிழகத்தின் சிறுபான்மையினரும் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களுமான இந்த இரு சமூக மக்களது நேயமனப் பான்மையிலும் நட்பு நிலையிலும் எவ்வித வேறுபாடும் ஏற்படவில்லை.


  1. Board's Miscellnious Register (Tamilnadu Archieves) vol. Il
  2. Sathianathair - History of Mydura Nayalcs (1924) (p.p.362 - 69).