பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

ஆனால் தினரா (தினார்) வுக்கு என்ன மதிப்பு இருந்தது என்பதை சுட்டுகின்ற ஆவணங்கள் கிடைக்கவில்லை. எட்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டுவரை தமிழகச் செலாவணியில் இருந்த இந்த நாணயங்களது பெயர்களுக்கான மூலம் கிரேக்க மொழியில் உள்ளது. தினேரியஸ் என்ற சொல் “தினார்” எனவும், திரக்மா என்ற சொல்’ "திர்கம்" எனவும் அரபு மொழியில் உருப்பெற்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பே கிரேக்க நாட்டிற்கும், அரபு மக்களுக்கும் இடையில், சமூக, கலாச்சார தொடர்புகள் இருந்தன. உமையாக்கள் ஆட்சியின் பொழுது அவை பல நிலைகளிலும் முன்னேற்றம் கண்டன. ஆதலால், அரபிகள் தங்களது பொன், வெள்ளி நாணயங்களை கிரேக்க பாணியிலும் பெயரிலும் தயாரித்து வெளியிட்டனர். இந்த நாணயங்களில் அரபு நாட்டிற்கொப்ப வடிவமைப்பில் மாற்றங்களை கலீபா உமர் அவர்கள் ஏற்படுத்தினார். குறிப்பாக செவ்வக வடிவில் இருந்த திர்கம் நாணயத்தை, வட்ட வடிவில் அமைத்து அதில் "அல்லாஹ்" "பரக்கத்" என்ற சொற்களைப் பொறிக்குமாறு செய்தார்.[1] அவரைத் தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களான உமையாக்கள், அப்பாளியாக்கள் ஆட்சியின் பொழுது இந்த நாணயங்களின் அச்சிலும் நிறையிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டதை வரலாறு கூறுகிறது. என்றாலும் அபத்அல் மாலிக் என்ற உமையா கலிபாதான் முதன் முதலாக அரபிய தினாரை தமாஸ்கஸ் நகரில் இருந்து கி.பி. 695 வெளியிட்டார். இராக்கில் இருந்த அவரது ஆளுநர் அல்ஹஜ்ஜாஸ் வெள்ளியிலான முதல் அரபி திர்கம் நாணயத்தை கூபா நகரில் கி.பி. 696ல் தயாரித்து வெளியிட்டார்.[2]

திர்கம் என்பது மற்றொரு வகையான வெள்ளி நாணய மாகும். இதனுடைய நிறை, 5, 6, 9, 10 மிஷ்கள் என ஒரு சிலரும் 10, 12, 20 காரட் என்று வேறு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.[3] தமிழகத்தின் இந்த நாணயம் "திரம்மா" என வழங்கப்பட்டது.


  1. Tabari — vol. 2. p. 939
  2. Philip K. Hitty History—of the Arabs
  3. Thomas Patrick Hujhes - Dictionary of Islam (1929) p.84