பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

யேற்றமான அஞ்சுவண்ணத்தார் வழங்கிய நாணயம் தான் வழக்கில் அஞ்சுமேனி திரமம் ஆகிவிட்டது. இந்த அரபுகளது திரமம் அப்பொழுது தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த பழங்காசுகளுடன் ஒரு சேர" செல்லும் நாணயமாக விளங்கியது. ஒன்பதாவது நூற்றாண்டில் மூன்று திரமம் இரண்டு பழங்காசுகளுக்குச் சமமாக மதிப்பிடப்பட்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் ஆறு திரமம் ஒரு பழங்காசிற்கும் இராமநாதபுரத்தில் ஏழு திரமம் ஒரு பழங்காசிற்கும் சமமாக கருதப் பெற்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில், ஏழு திரமம் ஆங்கில நாட்டு அஞ்சு ஷில்லிங் எட்டே கால் பென்ஸ் அளவிற்கு சமமாக இருந்ததாக கல்வெட்டு ஒன்று சொல்கிறது.[1] இத்தகைய நாணயப் புழக்கம் மிகுதி காரணமாக, அவைகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க அரபிகளால் தமிழ்நாட்டில் நாணய தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. கொற்கையிலும், தொண்டியிலும் அத்தகைய நாணய முத்திரை சாலைகள் இருந்தன. அந்த இடங்கள் கொற்கை மாறமங்கலத்தில் "அஃக சாலைத் தெரு" என்றும் தொண்டியில் "அன்ன சாலைத் தெரு" என்றும், இன்றும் குறிப்பிடப்படுவதிலிருந்து அந்த முத்திரை சாலைகள் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளை அறிய முடிகிறது. அரபுகளது இந்த நாணயச் செலாவணி ஆந்திர நாட்டில் பதினாறாவது நூற்றாண்டு வரை நீடித்தாலும், பாண்டிய நாட்டில் பதினான்காவது நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. மதுரையில் சுல்தான்கள் ஆட்சி ஏற்பட்டதும், அவர்கள் தில்லி சுல்தானைப் பின்பற்றி, வெளியிட்ட வெள்ளி, செம்பு நாணயங்கள் மக்களிடையே செலாவணிக்கு வந்தபிறகு, அரபிகளது தினாரும், திர்கமும், செலாவணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. என்றாலும் விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் அவைகள் மக்களிடையே புழக்கத்தில் தொடர்ந்து இருந்ததை கொண்டவீடு கல்வெட்டு குறிப்பிடுகிறது.[2] இந்த நவீன காலத்திலும், அரபுநாடுகள் சிலவற்றில் தினாரும் திர்கமும் செலாவணியில் இருந்து வருகின்றன. குவைத், பஹ்ரைன் நாடுகளில் தினாரும், செளதி அரேபியாவில் திர்கமும் சர்வதேச செலாவணியுடைய நாணயங்களாக இருந்து வருகின்றன. இவைகளுக்கு எல்லாம் மேலாக ஐரோப்பிய நாடான யூகோஸ்லாவி


  1. ARE 284 / 1923
  2. AR 242 / 1892 கொண்ட வீடு