பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

சென்னைக்கு மாற்றிக் கொண்ட நவாப் முகம்மது அலி அப்பொழுது சென்னைக் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயரின் பண்டகசாலையினையும் கோட்டையையும் அடுத்து கி.பி. 1763ல் இந்த அழகு மாளிகையை அமைத்தார்.[1] பற்பல தொகுதிகளான கட்டிடங்களையும் பூங்கா, நீச்சல்குளம் ஆகியவைகளுடன் விளங்கிய இந்த மாளிகை, ஆங்கிலேயரது ஆட்சியில் அழிமானம் எய்தியது. ஆனால் கால்சா மகால், ஹீமாயூன் மகால், திவானே கான்வாரா ஆகிய பகுதிகள் மட்டும் எஞ்சி நின்று இந்த நாட்டின் பாரம்பரிய கலைக்கு பல்லாண்டு பாடிக் கொண்டிருக்கிறது.

கி. பி. 1801 ல் ஆற்காட்டு நவாப்பினது ஆட்சியை தமிழக வரலாற்றில் இருந்து அகற்றி விட்டு, தமிழக நிர்வாகத்தினை நடத்திய ஆங்கிலப் பேரரசின் பிரதிநிதிகளாக கிழக்கிந்திய கம்பெனியார், தங்களது ஆட்சியின் பொழுது, சில பொதுக் கட்டுமானங்களை அமைத்தனர். கட்ந்த கால ஆடம்பரத்தையும் நிகழ்காலத் தேவையையும் உள்ளடக்கியதாக அவை அழகுடன் மிளிர்கின்றன. குறிப்பாக, சென்னை தலைமை நீதி மன்றம், கோவை விவசாயக் கல்லூரி, மதுரை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியன இவை அனைத்திலும் இஸ்லாமிய கட்டுமானப்பகுப்புகளான வில்வளைவு, உள்ளொடுங்கிய விதானம், சாய்ந்த, வளைந்த படிக்கட்டுக்கள் சிறு மினாராக்கள் போன்றவைகளை, பல அளவுகளிலும், முறைகளிலும் பயன்படுத்தி அழகு ஊட்டி உள்ளனர்.

இத்தகைய இஸ்லாமிய கட்டுமானக் கலை ஊடுருவலினால் தமிழக கட்டுமானக் கலையின் தொன்மையும், அழகும், கம்பீரமும், புதிய பரிணாமங்களில் பிரதிபலித்து நின்றன. கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகளது சிந்தனையும், செயல் திறனும் இந்தப் புதிய கலப்பினால் வளர்ந்து முதிர்ச்சி பெற்றுள்ளன. இந்த வளர்ச்சி மனித நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் தொடர்ந்து பலனளிைக்கும். அது போழ்து கடந்த பற்பல நூற்றாண்டுகளாக, மனித ஆற்றலும், அழகுணர்வும் கலந்து மலர்ந்துள்ள பிரம்மாண்டமாள் கட்டுமானங்களின் கவிதை ஒலியில், இறைவனது சாந்திமார்க்கமான இஸ்லாத்தின் இதய துடிப்பும் எதிரொலிக்கும்.


  1. “The Hindu” (3.9.1963) Former Residence of Nawab of Arcot