பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

யாக, பதினைந்து பதினாறாவது நூற்றாண்டில் பல்சந்த மாலை புனையப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒருமித்த கருத்தாகும். ஏற்கனவே பெளத்த, சமண, சைவ, வைணவ நெறிகளை தமிழ் இலக்கிய வார்ப்புகளாக அழகுத்தமிழில் வடித்து தமிழுக்கு அணி சேர்த்து இருந்த அரிய பணியை, தமிழக இசுலாமியரும் இந்த நூற்றாண்டுகளில் இருந்து தொடர்ந்து வந்துள்ளனர். இதனால், இஸ்லாமிய நெறிகளைக் கூறும், நூற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்களை படைத்து இஸ்லாமியத் தமிழ் என்ற தனியொரு பகுப்பினையும் தமிழுக்குத் தந்துள்ளனர்.

இசுலாமியத் தமிழர் என்று தொகுத்து அழைக்கும் வகையில், மக்கட் பிரிவினராக அவர்கள் மாறியதும் அவர்களது வாய்மொழியான தமிழ்மொழி, தாய் மொழியாகியது. அதனைப் பயின்று பேசி, ஆய்ந்து அகம் மகிழ்ந்து கன்னித்தமிழில் கனிவுறும் காவியங்கள், புனைய வேண்டும் என்று வேட்கையும் அவர்கட்கு எழுந்தது. காரணம் அப்பொழுது காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும், தமிழில் படைக்கப்பட்டு அவை தமிழ் மக்களால் பெரிதும் உவந்து ஒதப்பட்டு வந்தன. இறை மணங்கமழும் தேவாரமும் திருப்பாசுரங்களும் இனிய இசையோடு முழங்கின. அவைகளைக் கேட்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நபிமார்களது வாழ்வும், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் அருளிய உபதேசங்களும் (ஹதீஸ்களும்) அவர்களது நெஞ்சத்தை நெருடின. திருக்குர் ஆனும். தப்ஸீரும், ஹதிஸீம் தாய்மொழியான தமிழில் இருந்தால் இதயத்திற்கு இன்னும் நெருக்கமாகவும் இதமாகவும் இருக்கும் என்ற எண்ணங்கள் அவர்களிடம் இழையோடின.

அதுவரை, அன்றாட வாழ்க்கையில் தொழுகை, பாராயணம், பிரார்த்தனை ஆகியவைகளுக்காக அரபு மொழியையும் திருக்குர்ஆனையும், ஆழமாகப் பயின்று வந்த இசுலாமியப் பெருமக்கள், தமிழ்மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய பகுப்புக்களுக்கான ஏடுகளையும் ஆர்வமுடன் படித்தனர். அதன் முடிவு, இசுலாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என பெருமை கொள்ளும் வகையில் இலக்கியங்களைப் படைத்து தாய் மொழிக்கு அணிவித்து அழகு பார்த்தனர். சுவைத்துச் சுவைத்து இன்ப சுகம் கண்டனர். இசுலாத்