பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தமிழ் நூல்கள் பிழையோடு வெளிவருவதற்குரிய சில காரணங்களை மேலே குறிப்பிட்டோம். இந்நிலைகள் தவிர்க்கப்பட்டு, இனி நாம் கூறப் போகும், மெய்ப்புத் திருத்தும் முறைகளைச் செம்மையாகக் கையாண்டால், வருங் காலத்திலாவது தமிழ் நூல்கள் செம்மையாக வரும் என எதிர்பார்க்கலாம்.

ஆறுமுக நாவலர் பதிப்பித்த நூல்களிலும், கா.நமச்சிவாய முதலியார் நூல்களிலும், மறைமலையடிகள் நூல்களிலும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நூல்களிலும், டாக்டர் மு.வரதராசனார், டாக்டர் மா.இராச மாணிக்கம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை, மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை ஆகியோர் நூல்களிலும், பிழைகள் காணப்படவில்லை. பிழை திருத்துவதில் அவர்கள் காட்டிய முழு அக்கறையே இதற்குக்காரணம். தமிழிலும் பிழையின்றி நூல்கள் வந்தன என்று பெருமைப்படுவதற்கு மேற்கண்ட நூல்கள் சான்றாகும்.

பிழைதிருத்துபவர் கீழ்க்கண்ட தகுதிகள் உடையவராய் இருந்தால், நூல்கள் பிழையின்றி வெளிவரும்,

1. பிழைதிருத்தும் குறியீடுகள் முற்றிலும் தெரிந்தவராய் இருத்தல் வேண்டும்.

2. தமிழ் மொழியில் நல்ல தேர்ச்சியுடையவராய் இருத்தல் வேண்டும். இலக்கியங்கள் கற்றவராயும், இலக்கணம் நன்கு தெரிந்தவராயும் இருத்தல் வேண்டும்.


3. அமைதியாகவும், பொறுமையாகவும் எழுத்தெண்ணிப் படிக்கும் இயல்புடையவராய் இருத்தல் வேண்டும்.

4. மூலப்படியில் பிழை காணப்பட்டால், அதையும் திருத்திப் பதிப்பிக்கும் துணிச்சல் உடையவராய் இருத்தல் வேண்டும்.