பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


கோப்புப் பொருளுக்கு நடுவில் வரிகள், சொற்கள், எழுத்துகளுக்கிடையில் குறியீடுகள், கோடுகள் மட்டுமே குறிக்கப்பட வேண்டும். திருத்தங்கள் அனைத்தும் வெளி ஓரங்களிலேயே எழுதப்பட வேண்டும். உள்ளே செய்யப் படும் ஒவ்வொரு குறியும், வெளி ஓரத்திலும் காட்டப்பட்டு, அக்குறியின் பக்கத்தில் திருத்தம் குறிக்கப்பட வேண்டும்.

பிழைதிருத்தும் முறையறியாத ஒருவர் பககம் என்ற சொல் தவறாக இருப்பதைக் கண்டு ப வுக்கு அருகில் உள்ள க வின் மீது தம் பேனாவினால் ஒரு புள்ளியைக் குத்தி பக்கம் என்று ஆக்கிவிட்டார். பிழையைக் களையும் அச்சுக் கோப்பவர் அந்த இடத்தில் எந்தக் குறியீடும் இல்லாததாலும், பக்கம் என்று சரியாகவே அந்தச் சொல் இருந்ததாலும் திருத்தாமல் விட்டுவிட்டார். அது பககம் என்றே அச்சாகி விட்டது. எனவே வரியின் ஊடே திருத்தி எழுதவே கூடாது. எப்போதும் வெளி ஓரத்திலேயே திருத்தங்களை எழுத வேண்டும் .

78-ஆம் பக்கத்தில் பிழை திருத்தும் குறியீடுகள் பல கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நன்றாக மனத்தில் வாங்கிக் கொண்டு உரிய நேரத்தில் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பிழை திருத்துபவர், அச்சுக் கோக்கும் முறைகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சிறந்த அறிஞர்களின் நூல்களைத் திருத்தும் பேறு கிடைக்கும் பொழுது, மூலப் படியில் உள்ளபடியே திருத்த வேண்டும். ஐயம் ஏற்பட்டால், நூலாசிரியரை நேரில் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். நூலாசிரியர் ஒப்புதலின்றி மூலப்படிக்கு மாறுபாடாகத் திருத்தக் கூடாது. ஏனெனில் பிழையென்று நம் மனத்தில் படுவது சரியான சொல்லாகவே இருந்து, நாம் திருத்தியதால் அது பிழையாகி விடக்கூடாது.