பக்கம்:மூவரை வென்றான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

9


மூவரை வென்றான் கிராமம் வீரமல்லனுக்கு மானியமாகக் கிடைத்த நாளிலிருந்தே, நத்தம்பட்டி ஜமீனுக்கும் அவனுக்கும் எத்தனையோ சில்லறைத் தகராறுகள் ஆற்றுத் தண்ணிர் விஷயமாக ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் மதுரைச் சீமையிலிருக்கும் மங்கம்மாள் ஆட்சியின் அத்துக்குப் பயந்து நத்தம்பட்டி ஜமீன் அவனிடம் அதிகமாக வம்பு வைத்துக் கொள்ள அஞ்சியது. வீரமல்லனுடைய இனாம் நிலங்களுக்காக ஊரின் மேற்கே ஒரு பெரிய கண்மாய் அமைந்திருந்தது. அதேமாதிரி நத்தம்பட்டி ஜமீன் நிலங்களுக்காக அந்த ஊருக்கு மேற்கே மூன்று பெரிய கண்மாய்கள் அமைந்திருந்தன. அது பெரிய ஜமீன். அதனால் மூன்று கண்மாய்கள் தண்ணீர் வசதிக்குப் போதாது. மழைகாலத்தில் கன்னிமாலை ஆற்றில் வருகின்ற அளவற்ற தண்ணீர்ப் பிரவாகத்தைக் கொண்டுதான் வீரமல்லனின் ஒரு கண்மாயும், நத்தம்பட்டி ஜமீனின் மூன்று கண்மாய்களும் நிரம்பியாக வேண்டும்.

இனாம் கிராமமாக விடப்படுவதற்குமுன் ‘மூவரை வென்றான்’ பகுதி தரிசு நிலமாகக் கிடந்ததனால், ஆற்று நீர் முழுவதையும் நத்தம்பட்டி ஜமீன் பூரணமாக உரிமை கொண்டாடி வளமுற்றுக் கொழுத்துக் கொண்டிருந்தது. ஜமீன் நிலங்களில் இரண்டு போகம் மூன்று போகம் விளைவுக்குத் தண்ணிர் கண்டது. இந்த ஏகபோக உரிமை நிலைக்க வில்லை.

துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ தெரியவில்லை - விரமல்லன் கண்மாய் வெட்டியபோது ஆற்று மட்டத்தைவிடப் பள்ளமாக அமைந்து விட்டது, அவன் கண்மாய்.

இதன் விளைவு? ஆற்றுத் தண்ணீரில் பெரும் பகுதி ‘மூவரை வென்றான்’ கண்மாயில் பாய்ந்து அதை நிரப்பி விட்டு வடிகால் வழியே கலிங்கல் மட்டத்தைக் கடந்து கிழக்கேயுள்ள வேறு ஊர்களைச் சேர்ந்த கண்மாய்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/11&oldid=505541" இலிருந்து மீள்விக்கப்பட்டது