பக்கம்:மூவரை வென்றான்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

109

பேசிய அந்தப் பெண்ணை அவர் கண்கள் பாதாதிகேச பரியந்தம் கட்டிய புடவையையும் ஊடுருவி ஊனுடலைக் காணத் துருதுருத்தன. அவள் போட்டிருந்த புனுகு வாடை” ஏதோ ஒரு தினுசான போதையை அவர் மனத்தில் குபு குபு வென்று பாய்ச்சியது. அரை நூற்றாண்டாக அடங்கிக் கிடந்த புலனுணர்வு படம் விரித்தது.

ஐயருடைய கால்கள் நடந்துகொண்டுதான் இருந்தன. தலையில் சுமையும் இருந்தது. மனத்தில் மட்டுமென்ன? அவருடைய வாழ்வில் பெண் விஷயமாகச் சுமந்தறியாத அனுராகச் சுமை ஒன்று புதிதாக ஏறிவிட்டிருந்தது.

“ஏஞ்சாமீ! உங்களை ஒண்ணு கேக்கலாமா?” - வார்த்தை களுக்கு நடுவே கிணுகினுத்தாள் அந்தக் குட்டி. ஐயர் திரும்பிப் பார்த்தார். தோளிலிருந்து துப்பரவாக நழுவியிருந்த புடவையை, நிதானமாக எடுத்துப் போட்டுக்கொண்டாள் அவள்.

“ஐயோ! பாவம்! கள்ளங்கபடு தெரியாதது” என்று தனக்குள் நினைத்துக்கொண்டு, “என்னம்மா கேக்கனும்? கேளேன்!” என்றார்.

“காதுலே போட்டிருக்கிங்களே இந்தக் கடுக்கன்?... எம்மாம், பெரிய கடுக்கனுங்க...” இது எந்தக் காலத்துலே செஞ்சது சாமீ?”

“இதுவா? எனக்குப் பன்னிரண்டு வயசாயிருக்கிறப்போ பூனூல் போட்டாங்க...அப்பச் செஞ்சு போட்ட கடுக்கங்க இன்னைக்கிவரை கழட்டலே.”

“கர்ணனுக்கு மகரகுண்டலம் மாதிரின்னு சொல்லு வாங்க!...” அவள் மீண்டும் பழைய ஒய்யாரத் தலையசைப் புடன் கலகலப்பாகச் சிரித்தாள்.

“ஏதேது? மகாபாரதமெல்லாம்கூடப் படிச்சிருப்பே போல இருக்கே.”