பக்கம்:மூவரை வென்றான்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...


“என்னமோ, கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கேனுங்க...” சொல்லிக்கொண்டே வந்தவள் சட்டென்று வலது காலைத் தூக்கி நொண்டினாள். “என்னம்மா? ஏன் நொண்டுறே?”

“கால்லே முள்ளுத் தச்சுடிச்சுங்க. ஐயோ...உஸ்ஸ்...”

“இரும்மா! அப்படியே இரு...முள்ளு முறிஞ்சு கால்லே தங்கிடப் போறது...நான் முறியாமே எடுத்திடறேன்!”

ஐயர் மூட்டையைக் கீழே வைத்துவிட்டுக் குனிந்தார். அவளுடைய வலது பாதத்தைப் பிடித்து அடிப்புறமாகத். தடவினார். அங்கே முள்ளே இல்லை! முள் தைத்திருந்த அறிகுறியுமில்லை.

“முள்ளு ஒண்ணுங் காணலியே அம்மா”

“உளுந்திடுச்சுப் போலிருக்குங்க...”

அவர் அந்தப் பெண்ணின் பாதத்தை விட்டார். அவள் தடுமாறுகிறவளைப் போல் தடுமாறி அவர்மேல் சாய்ந்தாள். ஐயருக்கு உடல் முழுவதும் கிளு கிளு’வென்று புல்லரித்தது, முறுக்கேறுகிற கயிற்றைப்போல. மனத்தை அடக்கிச் சமாளித்துக்கொண்டு விலகி நின்றார். அவள் ஏதோ பெரிய விளையாட்டைக் கண்டவளைப்போலத் தொடர்ந்து. சிரித்துக் கொண்டிருந்தாள். அவர் மூட்டையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு நடந்தார். அவளும் அவரு டைய வலது விலாவில் இடித்துக் கொண்டும் இடித்துக் கொள்ளாமலும் நடந்தாள்.

“சாமீ, நாம் தலைவெட்டிப் பள்ளத்தைக் கடந்து தானே போவனும்?”

“ஆமாம்! அதுக்கென்ன?”

“இல்லே அங்ஙனே ஒரே கொலையும் கொள்ளையுமாகக் கிடக்குங்காகளே...?”

“நீ பேசாமே வாம்மா! உன்னை ஒரு பயமுமில்லாமே கிருஷ்ணாவரத்துலே கொண்டுபோய் விட்டிட்டு அப்புறம்: நான் நதிக்குடிக்குப் போறேன்."