பக்கம்:மூவரை வென்றான்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

89

களுக்குச் சோறிடும் தர்மத்தில் ஈடுபட்டான். தன்னை மனிதனாக்கிய வெள்ளையத்தேவனுக்குச் சிலை செய்து, அவன் இறந்த கொங்குமலைக் குகையிலேயே அதைத் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தான். கரிச்ல்குளத்திற்கும் கபிலக்குறிச்சிக்கும் குலதெய்வமானான் வெள்ளையத்தேவன். எந்தக் கரங்களால் வெள்ளையத்தேவனின் முதுகில் அம்பைத் தொடுத்தானோ, அதே கரங்களால் அவனுடைய சிலையின் திருவடிகளில் மலரைச் சொரிந்து, மனம் நெகிழப் பூசை செய்தான் பாப்பையன். வெள்ளையன் மனைவி மக்களும் ஊராரைப் போலவே அந்தச் சிலையைத் தெய்வமாக வழிபடலானார்கள். மாசி மாதம் அவன் இறந்த நாள் பெருவிழாவாக இரண்டு ஊராராலும் கொண்டாடப்பட்டது. வெள்ளையத்தேவன் தெய்வமானான். அவனது இரத்தம் சிந்திய பாறை, அவன் சிலை நிற்கும் கோயிலாயிற்று.

***

வீராசாமித்தேவர் எனக்கும் ஜான்ஸனுக்கும் இந்தக் கதையைக் கூறி முடித்தபோது, இரவு மணி பதினொன்றரைக்குமேல் ஆகியிருந்தது. மழையும் நின்று வெகு நேரமாகியிருந்ததினால், வானத்தில் மேகங்கள் வெளி வாங்கியிருந்தன. நட்சத்திரங்களும், நிலாவும் ஒளியைப் பரப்பியதால், பாவில் முழுகிய தெய்வபிம்பம்பேர்ல மலையில் நில இவாளி அங்கங்கே தவழ்ந்தது. நான் குகைக்குள்ளிருந்த வெள்ளையத்தேவனின் அந்தக் கம்பீரமான சிலையின் அருகில் சென்று பார்த்தேன். “மூன்று தலைமுறைக்கு முந்திச்செய்த சிலைங்க இது!” என்றார் வீராசாமித்தேவ்ர். பெருமிதம், விளங்கும் அந்தச் சிலை வாய் திறந்து,

“தெய்வம் மனித சரீரத்திலே இல்லை. அந்தச் சரீரத்தின் அதியுன்னதமான குண்ங்களில் இருக்கிறது” என்று என்னிடம் கூறுவதுபோல ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது.

நாங்கள் ஜீப்பில் ஊர் திரும்பும்போது, “இவர் சொன்ன் கதையைப்போலவே, இந்த ஊரைப்பற்றி மதுரை ஜில்லாவின் பழைய கெஜட்டில் ஒரு வரலாறு படித்ததாக ஞாபகம் வருகிறது” என்றார் ஜான்ஸன்.

“இருக்கலாம்” என்றேன் நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/91&oldid=508120" இலிருந்து மீள்விக்கப்பட்டது