பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மூவர் தேவாரம் - புதிய பார்வை அறிந்துகொண்டு அவர்தம் இல்லத்திற்கு வருகின்றார். சிவனடி யார் ஒருவர் வருகையை அறிந்த அப்பூதியடிகள் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, 'என்ன மாதவம் செய்ததோ இச்சிறுகுடில்? அருளுருவாய தாங்கள் அடியேன் குடிலுக்கு எழுந்தருளியது என் முன்னைத் தவப் பயனே' என மகிழ்ந்து உரைக்கின்றார். 'நாம் திருப்பழனத்திறைவனை வணங்கி வழி பட்டு வரும் பொழுது வழியிலே நீர் நிறுவியுள்ள தண்ணீர்ப் பந்தரைக் கண்டும், பிற அறங்களைப் பற்றி நல்லோர் பலர் மூலம் கேள்வியுற்றும் நும்மைக் காணும் விருப்பத்தால் இவண் போந்தோம்' எனக் கூறுகின்றார். சிறிதுநேரம் உரையாடியபிறகு நாவுக்கரசர், 'சிவனடியார் கள் பொருட்டு நீர் செய்து வரும் அறங்களில் நும் பெயரை எழுதாது வேறொருவர் பெயரை எழுதியதற்குக் காரணம் யாது? அதனைக் கூறுவீராக’’ என்று அப்பூதியடிகளை வினவுகின்றார். இவ்வுரை கேட்டு நிறையழிந்த சிந்தையராகின்றார் அப்பூதியடிகள். தம்முன் நிற்கும் சிவனடியாரை நோக்கி, "நீர் நன்மொழிகளை அருளிச் செய்திலீர். பழி பாவங்கட்கு நாணாத சமணப் பாதகர்கள் செய்த சூழ்ச்சிகளையெல்லாம் தம் திருத் தொண்டின் உறைப் பாலே வென்றருளிய மெய்த்தொண்டராகிய திருநாவுக்கரசரின் திருப்பெயரோ வேறொருவர் பெயர்? நம்மை ஆளாகவுடைய சிவபெருமானுடைய திருவடிக்கு விரும்பிப் புரியும் திருத் தொண்டினாலே இப்பிறப்பிலேயே இடர்களை யெல்லாம் வென்று உய்யலாம் என்னும் பேருண்மையை அடியேனைப் போன்ற எளியோர்களும் தெளிந்து உய்யும் வண்ணம் சிவத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசரது பெயரை அடியேன் எழுத நீர் இக்கொடுமொழியை அடியேன் கேட்கும்படி கூறினிர் பொங்கி எழும் கடுங் கடலிலே கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை யேறிய அவருடைய பெருமையை அறியாதார் யாருளர்?