பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 51 சண்பை வேந்தர் அப்பரைச் சோழ நாட்டிலேயே இருக்குமாறு பணிக்க, அவரும் அதற்கிணங்குகின்றார். வேயுறு தோளிபங்கன் என்ற இத்தேவாரப் பதிகம்" கோள்களாலும் (கிரகங்களாலும்) நாள்களாலும் (நட்சத்திரங்க ளாலும்) உலகியலில் நேரும் துன்பங்கள் சிவனடியார்களைச் சார்ந்து வருத்த பிள்ளையாரால் அருளிச் செய்யப் பெற்றது என்பதை, தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வார் ஆணை நமதே. (11) என வரும் இறுதிப் பாடலின் ஈற்றடிகள் இரண்டாலும் இனிது புலனாகும். இங்ங்னம் உறுதிப் பொருளைத் தம்மேல் ஆணை யிட்டு அறிவிக்கும் உரவோர் பிள்ளையார் ஆதலின் இவரை 'ஆணைநம தென்ற பெருமான்' என்ற பெயரால் நம் முன் னோர் கல்வெட்டுகளிலும் குறிப்பிட்டுப் போற்றியுள்ளனர். நாவரசர்பால் நன்முறையில் விடை பெற்ற பிள்ளையார் பல தலங்களை அடியார்கள் புடை சூழ சேவித்துக் கொண்டு மதுரை மாநகரின் மருங்கே வந்தணைகின்றார். காழிவேந்தரின் வருகையை அறிந்து மகிழ்வுற்ற அரசமாதேவி மங்கையர்க்கரசியார் பிள்ளையாரை எதிர் கொண்டழைக்கும்படி அமைச்சர் குலச்சிறையாரை அனுப்பி வைக்கின்றார். அமைச்சரும் அவ் வாறே செய்து, பிள்ளையார் அடியார்களுடன் மதுரையை அடைய ஆலவாயானை 'மங்கையர்க்கரசி (3.120) என்ற முதற்குறிப் புடைய செந்தமிழ் மாலையால் நிலமிசை வீழ்ந்து சேவிக்கின்றார் 32. நம் வாழ்க்கையில் நாளும் கோளும் நன்னிலையில் இல்லை என்பதை அறிய நேரும்போது இப்பதிகத்தைக் காலையிலும் மாலையிலும் ஓதி உளங் கரைதல் நன்று என்பது என் அநுபவம்.