பக்கம்:மேனகா 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மேனகா

அவரைச் சந்தோஷப்படுத்த நினைத்துக் கர்ணம் ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முதலியோர் நல்ல விருந்து தயார் செய்து அவருக்குப் பரிமாறினால், ஒட்டகம் ஆறு மாதங்களுக்குத் தேவையான தண்ணீரை வயிற்றில் சேகரம் செய்து வைத்துக் கொள்வதைப் போல, அவர் பல நாட்களுக்குப் பசியா திருக்கும்படிச் சாப்பிடுவார். ஆனால் பரிமாறும் கணக்குப் பிள்ளையின் மனைவி மீதிருக்கும் நகைகளையும், அந்த விருந்தின் சிறப்பையுங்கண்டு, அவன் லஞ்சம் அதிகமாக வாங்குகிறவனென்று நினைத்து, அவனை வேலையிலிருந்து தொலைக்க உறுதி கொள்வார். காலணாவிற்குக் கீரை வாங்குவதிலும் தாசில்தார் உத்தியோகத்தின் அதிகாரத்தைச் செலுத்தி நாலணா கீரை வாங்கிவிடுவார். அவர் எப்போதும் அம்பட்டனுக்கு முக்காலணா கொடுப்பது வழக்கம்; அவரிடம் இருந்தது ஒரு அணா நாணயமாக இருந்தால், அதைக் கொடுத்துவிட்டு, அதில் அதிகமாக இருக்கும் காலணாவிற்குத் தமது மனைவியின் தலையையும் சிறைத்துப் போகச் சொல்லக்கூடிய அற்ப குணத்தை உடையவர். இத்தகைய எண்ணிறந்த குண வேறுபாடுகளினால் தாசில்தாருக்கு டிப்டி கலெக்டர் மீது பெருத்த பகைமை உண்டாய்விட்டது. அவரை எவ்வகையாலும் கெடுத்து அவருடைய வேலையைத் தொலைத்துவிட வேண்டுமென்னும் உறுதி ஏற்பட்டு விட்டது. தாசில்தார் பெரிய கலெக்டர் துரையிடத்தில் பரம யோக்கியத்தைப் போல் நடந்து அவருடைய நன்மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்தார். அந்த நட்பை இழக்காமல் காப்பாற்றுவதற்காக அவர் வேறு எத்தகைய அட்டுழியம் செய்யவும் பின்வாங்கமாட்டார். ஒவ்வொருநாளும் அவர் காலையில் பெரிய கலெக்டரின் பங்களாவிற்குப் போவார். முதலில் அம்மன் சன்னிதிக்கு வெளியில் நின்று துரைசானி யம்மாளுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடி ஸ்தோத்திரம் செய்து காலை வந்தனம் சமர்ப்பிப்பார். அம்மாளுடைய தேக செளக்கியத்தை விசாரிப்பதோடு நில்லாமல், அம்மாளுடைய போஜனத்திற்காக வளர்க்கப்பட்டு வரும் ஆடுகள், கோழிகள், வாத்துக்கள், அம்மாளுடைய நாய், அம்மாள் படுக்கும் கட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/100&oldid=1249177" இலிருந்து மீள்விக்கப்பட்டது