பக்கம்:மேனகா 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மேனகா

வேண்டியதுதான். நாங்கள் நாயினும் கீழாகவே மதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால், அவர் எங்களுடைய மேலதிகாரி. அவர் மீது வேண்டுமென்று கோள் சொன்னது போலாகும். கவர்மெண்டாருக்குப் போகவேண்டிய அவசர அர்ஜி விஷயத்தில் நான் என் உயிர் போவதாயிருந்தாலும் வராமல் இருக்கவே மாட்டேன். எனக்கு என்னுடைய கடமையே பெரிதன்றி மற்றது. பெரிதல்ல - என்றார்.

துரை:- இந்த விஷயம் இருக்கட்டும். அவர் லஞ்சம் வாங்கும் விஷயம் எப்படி இருக்கிறது?

தாசில்:- அதைப்பற்றி சந்தேகங் கூடவா? அது ஒழுங்காக நடந்து வருகிறது. அவருடைய மைத்துனனை அவர் எதற்காக வரவழைத்து வீட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். அவன் மூலமாகவே லஞ்சம் வாங்கப்பட்டு வருகிறது. அவன் வைத்துக்கொண்டிருக்கும் தாசிக்கு மாத்திரம் மாதம் ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்கிறானாம். அவனுக்கு வேறு வருமானம் இல்லை. நிலம் முதலிய எவ்வித ஆஸ்தியுமில்லை. டிப்டி கலெக்டர் மனைவியின் உடம்பில் மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்கு நகை ஏறுகிறது. அவருடைய சம்பளம் ரூ.400. இவ்வளவும் எங்கிருந்து வரும்? பணத்தைக் கொடுத்தவர்களில் பலர் வந்து கேஸும் தம் பட்சம் ஜெயமாகவில்லை யென்று சொல்லி என்னிடம் அழுதார்கள். நான் என்ன செய்கிறது! மேலதிகாரியின் சங்கதி-என்றார். அதைக்கேட்ட துரை உள்ளூற ஆத்திரமடைந்தார். மீசை துடித்தது. ஆனால் தம்மை நன்றாய் அடக்கிக்கொண்டார். “இந்த அர்ஜி விஷயத்தில் அவர் செய்ததை நேரில் துரைத்தனத்தாருக்கு எழுதுகிறேன். தவிர நீரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் புளுகுமலைப் பிள்ளையும் லஞ்சம் வாங்கும் விஷயத்தைப் பற்றி இரகசியமாக விசாரணை செய்து சாட்சியங்களை சேகரம் பண்ணுங்கள். லஞ்சம் வாங்கின கேஸ்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம்-என்றார்.

தாசில்:- அதில் இன்னொன்றிருக்கிறது. அவர் மேலதிகாரி. உண்மையை அறிந்தவர்கள் அவருக்குப் பயந்து இரகசியத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/104&oldid=1249190" இலிருந்து மீள்விக்கப்பட்டது