பக்கம்:மேனகா 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மேனகா

பொருட்டோ? ஆசையோடு மோக்க நினைத்த ரோஜாப்பூவிதழில் கண்குத்தி நாகம் மறைந்திருந்ததைக் கண்டவரைப்போல நமது சாம்பசிவம் பெருந்திகைப்பும் மனக் குழப்பமும் அடைந்து என்ன செய்வதென்பதை அறியமாட்டாதவராய்த் தமது சாய்மான நாற்காலியையே சரணாகதியாக அடைந்தார். அன்று காலையில் பங்களாவிற்கு வரும்படி துரை தமக்கு உத்தரவு செய்திருந்ததையும் மறந்து பைத்தியம் கொண்டவரைப் போல உட்கார்ந்து விட்டார்.

கனகம்மாளுக்கு மாத்திரம் மேனகாவின் நாத்திமார்களின் மீதே சந்தேகம் உதித்தது. அவர்கள் செய்த துன்பங்களைப் பொறாமல் கிணற்றில் குளத்தில் வீழ்ந்து மேனகா உயிர் துறந்திருப்பாளோவென்று ஐயமுற்றாள். அருமைக் கண்மணி யான மேனகா வைத் தாம் இனிக் காண்போமோ காண மாட்டோமோ வென்று பெரிதும் சந்தேகித்தாள். அவளுடைய தேகம் பதைபதைத்து ஓரிடத்தில் நிலைத்து நில்லாமல் துடித்தது. துயரமும் ஆத்திரமும் கோபமும் பொங்கி யெழுந்தன. அவளுடைய மெய்யும் மனமும் கட்டுக் கடங்கா நிலைமையை அடைந்தன. எத்தகைய அலுவலும் காரணமுமின்றி அங்குமிங்கும் திண்டாடிக்கொண்டிருந்தாள். மேனகாவைத் தேடுகின்றாளோ அன்றி சென்னைக்குப் பறந்துபோக இரண்டு இறகுகளைத் தேடுகின்றாளோ வென்னத் தோன்றும்படி அறையறையாய்ப் புகுந்து புறப்பட்டாள். மேனகாவின் நாத்திமார் இருவரும் தனது கண்முன்னர் நிற்பதாகப் பாவித்து வெற்று வெளியை நோக்கிப் பல்லைக் கடித்து வைது கர்ச்சித்தாள்; காணப்படுவோரின் மீது சீறி விழுந்தாள். தனக்குத்தானே புலம்பினாள், அழுதாள், கதறினாள், பதறினாள், அயர்ந்தாள், சோர்ந்தாள், தடுமாறினாள், ஏங்கினாள், தள்ளாடினாள், வாய்விட்டு வைதாள், வயிற்றிற் புடைத்தாள், தெய்வங்களை யெல்லாம் தொழுதாள், “ என் மேனகா எங்கு போனாளோ ? என் செல்வம் தவிக்கிறதோ ? என் தங்கம் பசியால் துடிக்கிறதோ! என் மணிப்புறா களைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/108&oldid=1251026" இலிருந்து மீள்விக்கப்பட்டது