பக்கம்:மேனகா 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணாமற் போனாயோ கண்மணியே?

89

பெண் மேனகாவிற்கும் அப்போதே நல்ல காலம் திரும்பியதாக மதித்துக் கவலைச்சுமையை அகற்றி, ‘உஸ்’ஸென்று உட்கார்ந்த தங்களை விதி என்னும் கொடிய நாகம் இன்னமும் துரத்தியதாய் நினைத்துத் தளர்வடைந்தனர். வழக்கத்திற்கு மாறாகத் தமது மருமகப் பிள்ளை தம்மிடம் அன்பையும் வணக்கத்தையும் காட்டியதை நினைத்து சாம்பசிவம், இனி மேனகா துன்புறாமல் சுகமாய் வாழ்க்கை செய்வாள் என்று நினைத்துப் பெரு மகிழ்வு கொண்டிருந்தார். அதற்கு முன்தாம் தமது மருகப்பிள்ளையைப் பற்றிக் கொண்டிருந்த அருவருப்பை மாற்றி அவன் மீது முன்னிலும் பன் மடங்கு அதிகரித்த வாஞ்சையை வைத்தார். அந்த முறை மருகப்பிள்ளை தம்மிடம் காட்டிய நன்னடத்தையைப் பற்றித் தாய், மனைவி முதலியோரிடம் பன் முறை கூறி அவர்களையும் மகிழ்வித்தார். இரு நூறு ரூபாயில் மருமகப் பிள்ளைக்குத் தங்கச்சங்கிலி கடியாரம் முதலியவற்றை வாங்கி வைத்திருந்தார். மனிதன் எத்தகைய இடைஞ்சலுமின்றி தனது இச்சைப்படி தனது வாழ்க்கையையும் தனது நிலைமையையும் செவ்வைப் படுத்திக்கொள்ளவும் நீங்காத சுகம் அநுபவிக்கவும் வல்லமை உடையவனாயிருப்பானாயின் அவனுக்கு உண்டாகும் செருக்கிற்கும் இறுமாப்பிற்கும் அளவிருக்குமோ! பிறகு அவன் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்பதை நினைப்பானா! தன்னையே கடவுளா யன்றோ மதிப்பான். எவனும் பிறனை மதியான். இரண்டு மனிதருக்கு இடையிலுள்ள நட்பு, சார்பு, அன்பு, உதவி, பணிவு முதலியவை சிறிதும் இல்லாமல் போய்விடும்; உலகமே கலக்கத்திற்கு இருப்பிடமாய் நாசமடையுமன்றோ? அதனால்தான் கடவுள் விதி யென்பதை நியமித்து நம்முடைய நினைவுகளில் தலையிடச் செய்து நமது சிறுமையை நமக்கு ஓயாமல் அறிவுறுத்தி வருகிறார். நமது வாழ்க்கையாகிய காட்டை நாம் எவ்வளவு தான் வெட்டி அழகுப் படுத்தினாலும், அதில் விதியென்னும் புலியும், சிங்கமும், பாம்பும், தேளும், முட்களும், கற்களும் மேன்மேலும் காணப்படுகின்றன. விதிக்குக் கலெக்டரானாலும், கவர்னரானாலும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/107&oldid=1251023" இலிருந்து மீள்விக்கப்பட்டது