பக்கம்:மேனகா 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மேனகா


கனகம்:- இந்த அவசரத்திற்கு இல்லாமல், வேறு எதற்காகத்தான் ரஜா இருக்கிறது? சே! பெரிய துரை நல்லவராயிற்றே! அவசரமென்று நீ எழுதி இருக்கும்போது, நீ வரவில்லை யென்று ஏன் கோபிக்கிறான்? அவன் அவ்வளவு அற்பத்தன்மை உடையவனல்லன். உன்னைப்போலவும் உன்னுடைய தாந்தோனிராயனைப்போலவும் நடப்பா னென்று பார்த்தாயோ? துரைகள் அறியாமையால் ஏதாயினும் தவறு செய்வார்கள். நீங்களோ வேண்டு மென்று செய்பவர்கள். துரை ஒரு அடி வைத்தால் நீங்கள் ஒன்பதடி பாய்கிறீர்கள். தகப்பனுக்குத் திதி யென்று கோபாலசாமி அய்யர் ரஜாக் கேட்டதற்குத் துரை, “ஏன் ஞாயிற்றுக்கிழமை சாவகாசமாய் வைத்துக்கொள்ளக் கூடாதா?” என்று அறியாமையால் கேட்டான். தாலுகா குமாஸ்தா தனகோடிப் பிள்ளை தனக்கு சாந்தி முகூர்த்தம் என்று இரண்டு நாளைக்கு ரஜாக் கேட்டபோது, வேறு ஏஜென்டு வைத்து அதை ஏன் நடத்தக் கூடாது என்று கேட்டான். வெள்ளைக்காரரை நம்பலாம்; உங்களை நம்பக்கூடாது - என்றாள்.

அப்போது கிண் கிண்ணென்று பைசைகிளின் மணியோசை உண்டாயிற்று. அடுத்த நிமிஷம் தடதடவென்று சைகிளை உள்ளே உருட்டிக்கொண்டு வந்த கிட்டன் அதை யொருபுறமாக நிறுத்தி விட்டு நேராகச் சாம்பசிவத்தினிடம் சென்று தனது சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை யெடுத்து மேஜை மீது வைத்தான். அவர் மிகுந்த ஆத்திரத்தோடு பாய்ந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தார். கனகம்மாளும் ரஜாக் கிடைத்ததோ இல்லையோ என்பதை அறிய ஆவல் கொண்டு துடிதுடித்து நின்றாள்.

அவர்கடிதத்தைப் படிப்பதற்குள் நாம் அதைக் கொணர்ந்த கிட்டனைப் பற்றிய விவரத்தில் சிறிதறிவோம். அவன் தங்கம்மாளின் தம்பி என்பதைச் சொல்வது மிகையாகும். அவன் இருபத்திரண்டு வயதடைந்தவன். அழகிய சிவந்தமேனியையும் வசீகரமான பெண் முகத்தையும் பெற்றவன். அவன் தலையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/112&oldid=1249240" இலிருந்து மீள்விக்கப்பட்டது