பக்கம்:மேனகா 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மேனகா

மைந்தரென்று சத்தியம் செய்தாலும், அவரது சொல்லை எவரும் நம்பார். தவிர, அவன் தமது புத்திரன் என்பதை அவரே கண்டுபிடித்தல் முடியாது. ஆனால் சூது, கபடம், வஞ்சம் முதலியவற்றை அவன் அறியாதவன். முகவசீகரம் பெற்றவன். அவனுடைய கபடமற்ற தோற்றமும், குழந்தைச் சொற்களும், அவன் மீது யாவரும் விருப்பங்கொள்ளச் செய்தன. சாம்பசிவம் தமது மனைவியின் மீது காதல் கொண்டிருந்தார். கிட்டான் மீதோ மோகங் கொண்டிருந்தார். தங்கம்மாள் சாம்பசிவத்தைக் காணாமல் ஒரு பகல் சகிப்பாள்; தமது செல்லத் தம்பியான கிட்டனைக் காணாமல் பத்து நிமிஷமும் சகித்திராள். வீட்டின் விஷயங்களில் அவ்விருவரும் அவன் சொல்லை மிக்க மதித்து அதன்படியே நடந்து வந்தனர். வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்குதலிலோ மற்ற தேவைகளைக் கவனித்தலிலோ அவன் எஜமான், அவன் சித்தமே மந்திரி. அவனுக்குப் பலவகைப்பட்ட மனிதரென்னும் வேறுபாடே கிடையாது. தம் வீட்டுக் குதிரைக் காசாரியோடும் சகோதர உரிமை பாராட்டி அவனோடு கட்டிப் புரளுவான். வாசற் பெருக்கி நாகம்மாளின் வெற்றிலை பாக்குப் பையைப் பிடுங்கி அதிலிருந்து புகையிலை எடுத்துப்போட்டுக்கொள்வான். அவன் மனதில் ஒரு இரகசியம் நிற்பதில்லை. பெருத்த கொலை, கொள்ளை முதலிய கேஸ்களில் சாம்பசிவம் முதல்நாளே தீர்மானம் எழுதிவிடுவார். கிட்டன் அதை வேடிக்கையாகப் படித்துப் பார்த்துவிட்டு இரகசியமாக சேவகர்களிட மெல்லாம் சொல்லிவிடுவான். அவர்கள் அந்தச்சரக்கை வைத்துக்கொண்டு தமது திறமைக்குத் தகுந்தபடி வர்த்தகம் செய்து டிப்டி கலெக்டர் பெயரைச் சொல்லி பெருத்த பொருள் தட்டி விடுவார்கள். அதனால் டிப்டி கலெக்டர் லஞ்சம் வாங்குகிறார் என்று பெருத்த வதந்தி கிளம்பி ஊரெல்லாம் அடிபட்டது. அவர்மீது ஆத்திரங் கொண்டவர் யாவரும் அதை ஒன்றிற்குக் கோடியாய் வளர்த்துப்பேசி வந்தனர்.

இத்தகைய குண வொழுக்கங்களைக் கொண்ட யெளவனப் புருஷனான கிட்டன் கொடுத்த கடிதம் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/114&oldid=1249520" இலிருந்து மீள்விக்கப்பட்டது