பக்கம்:மேனகா 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மேனகா

முதலில் பிணங்கவேண்டும் போலிருக்கிறது. எனக்கு உன்மீது ஆழ்ந்த காதல் இருக்கின்றதா என்று பார்த்தது போதும். நான் அல்லா ஹுத்தாலா மீது சத்தியம் செய்கிறேன். இனி நீயே என் உயிர். நீயே என் நாயகி. நீயே என் செல்வம். நீயே நான் தொழும் ஆண்டவன். இந்த உடல் அழிந்தாலும் நான் உன்னையன்றி வேறு பெண்களைக் கண்ணால் பார்ப்பதில்லை; உன் மீது எனக்குள்ள ஆசையை நான் எப்படி விரித்துச் சொல்லப்போகிறேன்! நாம் நூறு வருஷம், ஆயிரம் வருஷம், கோடி வருஷம், இந்த உலகம் அழியும் வரையிலும், ஒன்றாய்க் கூடியிருந்து இன்பம் அநுபவித்தாலும் அது தெவிட்டுமோ? என் ஆசை குறையுமோ? நான் இறந்தாலும் “மேனகா” என்றால் என் பிணம் எழுந்து உட்காரும், என் உடம்பு மண்ணோடு மண்ணாக மாறினும், மேனகா வருகிறாள் என்றால், அவளுடைய பாதம் நோகுமோ என்று அந்த மண் நெகிழ்ந்து தாமரை இதழின் மென்மையைத் தரும்” என்றான்.

மேனகா:- பாத்திரமறிந்து பிச்சையிடவேண்டுமையா; இவ்விடத்தில் உதவியின்றி அகப்பட்டுக்கொண்டேன் ஆகையால், உம்மை நான் ஒரு மனிதனாய் மதித்து மரியாதை செய்து மறுமொழி தருகிறேன். இத்தகைய அடாத காரியத்தைச் செய்த நீர், எனக்கு உதவி கிடைக்கும் வேறிடத்தில் இருந்தீரானால் உம்மை நான் மனிதனாகவே மதித்திரேன். கேவலம் நாயிலும் கடையாய் மதித்து தக்க மரியாதை செய்தனுப்பி யிருப்பேன். அவ்வாறு உம்மை அவமதிக்கும் என்னிடம் நீர் ஆசை கொள்வதனால் பயனென்ன! உலகத்தில் என்னுடைய கணவன் ஒருவனே என் கண்ணிற்குப் புருஷனன்றி மற்றவர் அழகில்லாதவர், குணமில்லாதவர், ஆண்மை யில்லாதவர், ஒன்றுமற்ற பதர்கள். உம்மைக் கொடிய பகைவனாக மதித்து வெறுக்கும் என்னை வெளியில் அனுப்புதலே உமது கெளரவத்துக்கு அழகன்றி, என்னை நீர் இனி கண்ணெடுத்துப் பார்ப்பதும் பேடித்தனம்.

நைனா:- (புன்னகை செய்து) என் ஆசை நாயகி, யல்லவா நீ! நீ எவ்வளவு கோபித்தாலும் எனக்கு உன் மீது கோபம் உண்டாகும் என்று சிறிதும் நினைக்காதே. ஒரு நிமிஷத்தில் நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/124&oldid=1249542" இலிருந்து மீள்விக்கப்பட்டது