பக்கம்:மேனகா 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடச்சிறான்கை மாடப்புறா

107

என்னுடைய உயிரையும், மனதையும், ஆசையையும் கொள்ளை கொண்டுவிட்டாய். உன் புருஷன் உன்னை எவ்வளவு வைது அடித்துச் சுட்டுத் துன்புறுத்தினாலும் நீ அவனையே விரும்புகிறாயே. அப்படி நீ என்னை இழிவாய்ப் பேசுவதும், கடிந்து வெறுப்பதும் எனக்கு இன்பத்தைத் தருகின்றனவன்றி துன்பமாகத் தோன்றவில்லை. வீணில் பிடிவாதம் செய்யாதே; நீ எவ்வளவு தந்திரமாகப் பேசினாலும், அல்லது வெறுத்துப் பேசினாலும் நான் உன்னை விடப்போகிறதில்லை. என் படுக்கைக்கு அருகில் வந்த பெண்மயிலை நான் விடு வேனாயின் என்னைக் காட்டிலும் பதர் எவனும் இருக்க மாட்டான். நீ எப்படியும் என்னுடைய ஆலிங்கனத்திற்கு வந்தே தீர வேண்டும். அதை நீ வெறுப்போடு செய்வதைவிட விருப்போடு செய்வதே உனக்கும் நன்மையானது; எனக்கும் நன்மையானது. உங்களுக்கு ஒரே புருஷன் மீதுதான் விருப்பம் என்பதென்ன? எங்களிடம் வெறுப்பென்ன? அந்த ஆசை என் மீதும் உண்டாகும் என்பதை நான் உனக்குக் காட்டுகிறேன். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாதே. மாற்றமில்லாத தங்கமல்லவா நீ! இவ்வளவு பாடுபட்டுக் கொணர்ந்த உன்னை விட்டுவிட என் மனம் சகிக்குமா? இன்றைக்கு நான் உனக்கருகிலும் வருவதில்லை. நீ ஏதாயினும் ஆகாரம் செய்துவிட்டு சுகமாய்ப் படுத்துக்கொள். இரண்டொரு நாளில் நீயே என்னை விரும்புவாய்.

மேனகா:- (கோபத்தோடு) உமக்கேன் அவ்வளவு வீண் பிரயாசை இருப்பதை மாற்றவும் இல்லாததை உண்டாக் கவும் உம்மால் ஆகுமா? நாயின் வால் ஏன் கோணலாய் இருக்கிறதென்று நீர் கேட்க முடியுமா? அல்லது அதை நிமிர்க்க உம்மால் ஆகுமா ? மனிதன் சோற்றில் கல்லிருக்கிறதென்று அதை நீக்கிவிட்டு ஏராளமாகப் போர் போராய் அகப்படுகிறதென்று வைக்கோலைத் தின்பதுண்டா? என் புருஷன் என்னைக் கொடுமையாய் நடத்துகிறார். நீர்கொள்ளை கொள்ளையாய் ஆசை வைக்கிறீர். அதனால் என்னுடைய உயிருக்குயிரான நாதனை நான் விலக்க முடியுமா? அது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/125&oldid=1249549" இலிருந்து மீள்விக்கப்பட்டது