பக்கம்:மேனகா 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மேனகா

னில்லாததை அறிந்து, திடீரென்று தோன்றி உதவி புரிந்த உத்தமனாகிய உன்னை நான் கணவனிலும் மேலாக மதித்துக் கடைசிக் காலத்தில் என் மார்பை நீ தீண்ட விடுகிறேன். நீ என் மார்பின் வெளிப்புறத்தை மாத்திரம் தீண்டுதல் போதாது. அதன் உட்புறத்திலும் நுழைந்து அதற்குள்ளிருக்கும் என் இருத யத்தையும் இரண்டாகப் பிளந்து அதற்குள் நிறைந்திருப்பது என்னவென்று பார். அங்கு நிறைந்திருக்கும் என் கணவன் உருவை மாத்திரம் ஒரு சிறிதும் வருத்தாதே, வாளே! ஏன் தயங்குகிறாய்? உன் மானத்தைக் காப்பாற்றியது, உன்னைக் கொல்வதற்குத்தானோ என்று கேட்கிறர்யோ? அன்றி, “என் இருதயத்தைப் பிளந்து விட்டால், பிறகு என் கணவன் வடிவத்திற்கு இருப்பிடம் இல்லாமல் போகிறதே என்று நினைக்கிறாயோ?” என்று பலவாறு கத்தியோடு மொழிந்தாள். அப்போது அவளுடைய கணவனது வடிவம் அகக் கண்ணிற்குத் தோன்றியது, நெஞ்சு இளகி நைந்தது. இருப்பினும் எஃகினும் வலியதாய்த் தோன்றிய அவளுடைய மனதின் உறுதி தளர் வடைந்து, அவன் மீது வைத்த காதலும் வாஞ்சையும் திரும்பின. கண்களில் கண்ணீர் வழிந்தது. என்ன செய்வாள்? “ஆ! என் பிராணநாதா! என் மனதிற்குகந்த மனோகர வடிவே! இணையற்ற இன்பம் பாய்ந்த என் மன்மத துரையே! உங்களிடம் இந்த ஐந்து நாட்களாய் நான் அநுபவித்த சுவர்க்கபோகமாகிய பேரானந்த சுகம் ஈசுவரனுக்குக் கூடச் சம்மதி இல்லை போலிருக்கிறது. நான் இந்த உயிரெடுத்து இவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்ததற்கு இந்த ஐந்து நாட்களே நல்ல நாட்கள். இவைகளே பயன் பட்ட சுபதினங்கள். மற்ற நாட்கள் யாவும் சாம்பலில் வார்த்த நெய்போல, அவமாக்கப்பட்ட நாட்கள் தாம். இனி நான் உங்களை எங்கு காணப்போகிறேன்? சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போன்ற உங்களுடைய சொல்லமுதை இனி என் செவி எப்போது அள்ளிப் பருகப்போகிறது? அதனால் என் உடம்பு இனி ஒரு தரமாயினும் பூரித்துப் புளகாங்கிதம் அடையப் போகிறதோ? இந்த சுகம் நீடித்து நிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/134&oldid=1251027" இலிருந்து மீள்விக்கப்பட்டது