பக்கம்:மேனகா 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடச்சிறான்கை மாடப்புறா

117

என்றல்லவோ பாவியாகிய நான் நினைத்தேன்! தெய்வம் என் வாயில் நன்றாக மண்ணைப் போட்டுவிட்டதே! நான் தஞ்சையிலிருந்த ஒரு வருஷத்தில் இறந்து போயிருக்கக் கூடாதா? அப்போது உங்களுக்காயின் வருத்தமில்லாமற் போயிருக்குமே. இப்போது உங்களுக்கு நீடித்த விசனம் வைத்துவிட்டேன். ஆனால், எனக்கு உண்டான இம்மானக் கேட்டை நீங்கள் கேட்டு மீளாவேதனைக் கடலில் ஆழ்தலினும், சாதாரணமாக என்னை இழப்பதன் துயரம் நீடித்து நில்லாமல் விரைவில் தணிந்து போம். தஞ்சையிலேயே உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த நான் உங்களை விடுத்துச் செல்ல மனமற்றுத் தவித்தேனே! இப்போது உங்களிடம் வந்து எவருக்கும் கிடைக்காத பெரும்பேறான உங்களுடைய அந்தரங்கமான வாத்சல்யத்தையும், உண்மையான காதலையும் பெற்றபின் உங்களை விடுத்துப் பிரிந்து போவதற்கு என் மனம் இணங்குமோ? என் நாதா! என் நிதியே! என் உலகமே! என் பாக்கியமே! என் சுகமே! என் உயிரே! என்! தெய்வமே! உம்மை விடுத்துப் பிரிய மனம் வருமோ? நான் வாளால் என் கழுத்தை அறுத்துக் கொண்டாலும் உங்களிடம் சுகம்பெற்ற இவ்வுடம்பை விட்டு என் உயிர்போகுமோ? என்கட்டை தான் வேகுமோ? என் மனந்தான் சாகுமோ? என் செல்வமே ! உங்களை விட்டு எப்படி பிரிவேன்? உங்களுடைய பொருளாகிய கற்பைப் பறிகொடுக்க மனமற்று என் உயிரையே கொடுக்க இணங்கிவிட்டேன். இனி சாகாமல் தப்புவது எப்படி? நாம் இருவரும் ஒன்றாயிருக்கக் கொடுத்து வைத்தது இவ்வளவே. நீங்கள் என் பொருட்டு வருந்தாமல் செளக்கியமாக இனிவேறொரு மங்கையை மணந்து இன்புற்று வாழுங்கள். அதைப்பற்றி நான் வருந்தவில்லை துரையே! போகிறேன். போகிறேன். பட்சம் மறக்க வேண்டாம். அன்பைத்துறக்க வேண்டாம். நான் பெண்டீர் யாவரிலும் ஏழை. கணவன் சுகத்தை நீடித்து அடையப் பாக்கியம் பெறாத பரம ஏழை. முன் ஜென்மத்தில் எத்தனையோ பிழைகளைச் செய்து ஈசுவரனுடைய கோபத்திற்குப் பாத்திரமான மகா பாதகி! நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/135&oldid=1249789" இலிருந்து மீள்விக்கப்பட்டது