பக்கம்:மேனகா 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மேனகா

என் மடமையாலும் பெண்மையாலும், உங்கள் விஷயத்திலும் எத்தனையோ பிழைகளைச் செய்திருப்பபேன்.

“கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நில்லாப்பிழை நினையாப் பிழையு நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையுந் தொழாப்பிழையு
மெல்லாப்பிழையும் பொறுத்தருள்வா யென்றனாருயிரே”

உங்களுடைய புதிய நட்பில் புதிய மனைவாழ்க்கையில் வருஷத்திற்கு ஒருமுறையேனும் என்னை நினைப்பீர்களா? பாவியாகிய என் பொருட்டு தங்கள் மனம் ஒரு நொடி வருந்துமாயின், நான் கடைத்தேறி விடுவேன். உங்கள் கண் என் பொருட்டு ஒரு துளியளவு கண்ணிர் விடுமாயின் என் ஜென்மம் சாபல்யமாய் விடும். உத்தரவு பெற்றுக்கொள்கிறேன். என் உயிர் நிலையே போய் வருகிறேன். என் தெவிட்டாத தெள்ளமுதே! போய்வருகிறேன். தேவரீர் பொற்பாத கமலங்களில் ஆயிரம் முறை தெண்டம் சமர்ப்பித்தேன். தேவரீர் பாதமே எனக்குத் துணை. தேவரீரது ஆசீர்வாதம் நீங்காமல் என்மீது இருப்பதாக” என்றாள். முத்துமாலை கீழே விழுதலைப்போலக் கண்ணிர் வழிந்து பார்வையை மறைத்தது. அப்படியே நைந்து இளகி உருகி அன்புக் குவியலாய் ஆசைமயமாய்க் கண்களை மூடி ஒரு நிலையிலிருந்து, தன் கணவன் வடிவத்தை அகக்கண்ணிற்கொண்டு அதில் ஈடுபட்டு நெக்கு நெக்குருகிச் சலனமற்ற தெவிட்டாத ஆநந்தவாரியில் தோய்ந்து அசைவின்றி ஒய்ந்து உலகத்தை மறந்து மனோமெய்களை உணராமல் நின்று அசைந்தாடினாள். அவ்வாறு கால்நாழிகை நேரம் சென்றது. அந்த சமாதி நிலை சிறிது சிறியதாய் விலகத் தொடங்கியது. தானிருந்த அறையின் நினைவும், தன் விபத்தின் நினைவும், தான் செய்யவேண்டு வதான காரியத்தின் நினைவும் மனதில் தலைகாட்ட ஆரம்பித்தன. திரும்பவும் தனது கையிலிருந்த வாளை நோக்கினாள். அவளுடைய உரத்தையும் துணிவையும் கொண்டாள். “கத்தியே! வா இப்படி; நான் இந்த உலகத்திலிருந்தது போதும், களங்கத்தைப் பெற்ற நான் இனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/136&oldid=1249791" இலிருந்து மீள்விக்கப்பட்டது