பக்கம்:மேனகா 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மேனகா

கிறான்; நீ அவனுக்குத் தந்தி அனுப்பினாயோ? இப்படிச் செய்தவன் முகத்தில் எந்த மானங்கெட்டவனாயினும் விழிப்பானா? அல்லது அவனுக்குத்தான் எழுதுவானா? இந்த ஆறுநாளில் உன் புத்தி எப்படியாய்விட்டது! நீ எடுப்பார் கைக் குழந்தைதானே! எட்டும் இரண்டும் இவ்வளவென்பதை அறியாத ஒரு சிறுக்கி, பி.ஏ., பி.எல்., பரிட்சை கொடுத்தவனை, ஒருநாள் போட்ட சொக்குப்பொடியில் குரங்கைப் போல ஆட்டி வைப்பாளானால், அது யாருடைய மூடத்தனத்தைக் காட்டுகிறது! எங்களிடம் சொல்லிக்கொள்ள வேண்டாம்; கட்டின புருஷனிடமாவது மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகவேண்டுமென்று நினைத்தாளா! இப்படிச் செய்தவளை ஆண்மையுள்ள எந்தப் புருஷனாவது மானமில்லாமல் பெண்டாட்டியென்று சொல்லிக்கொள்வானா! உன்னிடம் அடங்கிக் கிடக்க வேண்டியவளுக்கே நீ இலட்சியமில்லாதபோது, அவளைப் பெற்றவனுக்கு நீ ஒரு பொருட்டா? நல்ல இளிச்சவாயன் (இளித்தவாயன்) என்று கண்டான். உன் தலையில் வழவழ வென்று மிளகாய் அறைத்து விட்டான்” என்று சம்பந்தாசம்பந்தமின்றிச் சொற்களையும், கைகளையும், உடம்பின் சதை மடிப்புகளையும் உலுக்கினாள்.

வராகசாமி சிறு வயதிலிருந்தே சகோதரிமாரிடம் ஒருவித அச்சத்தையும் மரியாதையும் கொண்டிருந்தவன். ஆதலின், அவர்களிடம் எதிர்வாதம் செய்தறியான். என்றாலும், கூர்மையான பகுத்தறிவைக் கொண்டவன். ஆதலின், அவர்கள் பொருத்தமற்ற சொற்களைச் சொல்லக் கேட்கும் போதெல்லாம் வெளிப்படையாய் மறுத்துக்கூறும் துணிவின்றித் தன் மனதில் அது தவறெனவே கொண்டு, போனாற் போகிற தென்று விட்டு விடுவான்.

மேனகாவின் மீது அவர்கள் அவன் மனதில் நெடுங் காலமாகப் பகைமையும் வெறுப்பையும் உண்டாக்கி வந்திருந்தனர். ஆயினும், அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளும்படி செய்ய அவன் மனதை அவர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/148&oldid=1251031" இலிருந்து மீள்விக்கப்பட்டது