பக்கம்:மேனகா 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகாவின் கள்ளப்புருஷன்

131

சாமாவையரும் கலைத்து அவள் மீது உண்டாக்கிய ஆசை நிரந்தரமாய் அப்படியே அவன் மனதில் வேரூன்றி விட்டது. அவன் மனதை உழுது பண்படுத்தி கற்களை விலக்கி அவர்கள் நட்ட காதல் விதை முளைக்க, அதை அவ்வைந்து நாட்களில் மேனகா தனது ஆழ்ந்த வாத்சல்யமாகிய உரத்தைப் பெய்து, இரமணிய குணமாகிய நீரைப்பாய்ச்சி, இனிய ஒழுக்க மெனும் பாதுகாப்பினால் செடியாக்கி மரமாக்கி விட்டனள். அக்காதல் மரத்தில் ஆசையும், அன்பும், பட்சமும், இரக்கமும், தயையும் பூக்களாய்ப் பூத்தன. ஒவ்வொரு கொத்திலும் பழங்கள் வெளிப்படத் தவித்துக்கொண்டிருந்தன. ஆதலின், அவள் விஷயத்தில் அவன் மனதில் அசைக்கக்கூடாத நம்பிக்கையும் அந்தரங்கமான வாஞ்சையும் உண்டாயிருந்தன. அவள் தன்னுடைய அநுமதியின்றி தந்தையுடன் சென்றிராள் என்று உறுதியாக நினைத்தான். டிப்டி கலெக்டர் அனுப்பிய தந்தி உண்மையானது என்றும், அவர் அவளை அழைத்துப் போகவில்லை யென்றும், அவர் அவளை அழைத்துப் போயிருந்து பொய் சொல்வது அவருக்குக் கேட்டையன்றி நன்மையைத் தராது ஆகையால், அவர் அவ்விதம் சொல்ல வேண்டிய முகாந்தரமில்லையென்றும் நிச்சயமாக நினைத்தான். ஆனால், மேனகாவோ வேறு எவருடனும் தனியே போகிறவளன்று; அக்காளோ பொருத்தமில்லாத சொற்களை அழுத்தமாய்ச் சொல்லி அதட்டுகிறாள். மேனகா காணாமற்போன வகைதான் என்ன என்று பலவாறு நினைத்து மனக்குழப்பம் அடைந்து நின்றவனாய், “அவர் இந்த ஊருக்கே வரவில்லை யென்று சொல்லுகிறாரே! அதை நாம் எப்படி பொய்யென்று நினைக்கிறது? அவர் சாதாரண மனிதரல்ல. சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர். அவர் ரஜா வாங்கினாரா இல்லையா என்பதைப் பற்றி தஞ்சாவூரில் நம்முடைய சிநேகிதர் யாருக்காயினும் எழுதி உண்மையை ஒரு நிமிஷத்தில் அறிந்து விடலாமே. இந்தப் பொய் நிலைக்காதென்பது அவருக்குத்தெரியாதா? அவர் வந்திருக்கமாட்டாரென்றே தோன்றுகிறது” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/149&oldid=1250199" இலிருந்து மீள்விக்கப்பட்டது