பக்கம்:மேனகா 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகாவின் கள்ளப்புருஷன்

149

போன்ற மனைவி நான் எத்தனை ஜென்மம் எடுத்து என் ஆயுட்காலம் முழுதும் தவம் புரிந்தாலும் கிடைப்பாளோ! என் பாக்கியமே பாக்கியம்!” என்றெண்ணி அன்பு மயமாக இளகி அயர்ந்தான். மற்றவர் முகங்களைப் பார்த்தான். அவர்களும் அதைக்கண்டு ஒரு வித இளக்கமடைந்தவர்களாகத் தோன்றினர். “இத்தகைய கண்மணியைப் பறிகொடுத்தேனே! அவள் எங்கு போயிருப் பாளோ! எப்படி மறைந்திருப்பாளோ!” என்று நினைத்து ஏங்கினான். “அது நிஜமோ? அக்காள் சொல்வது நிஜமோ? அல்லது இரண்டும் உண்மையோ? என்னை அவள் இவ்வாறு தெய்வமாக மதித்திருப்பதனால் என்னைத் தன் வசமாக்க அவள் தனது மடமையாலும் பாட்டி முதலியோரின் துர்ப்போதனையாலும் எனக்கு ஏன் மருந்திட்டிருத்தல் கூடாது? அக்காள் சொல்வது மெய்யாகவே இருக்கலாம். அவள் எனக்கு மருந்திட்டிருந்தாலும் அதை நான் குற்றமாக கொள்வது தவறு. இருக்கட்டும் நாளைக்கு அவர் எப்படியும் வருவார். உண்மையை அறிந்து கொண்டு நானே நேரில் தஞ்சைக்குப் போய், அவளுக்கு நல்ல அறிவூட்டி, அவள் இங்கே இருந்தாலும் அவளைச் செல்வமாகவும் சீராகவும் வைக்கிறே னென்றும், அன்போடும் ஆசையோடும் நடக்கிறேனென்றும் உறுதி செய்து கொடுத்து விட்டு, அழைத்து வந்து விடுகிறேன்” என்று முடிவு செய்து கொண்டு தந்தப் பெட்டியைத் தனக்கருகில் வைத்துக்கொண்டான். மேலே ஆராய்ச்சி செய்தலை நிறுத்தி விட நினைத்தான். அந்த உத்தமியின் மீது எவ்வித ஐயமும் கொள்வதனால் தனக்குப் பெருத்த பாவம் சம்பவிக்கும் என்று அவன் மனது கூறியது. அவள் தன்னைப் பற்றி இன்னும் என்ன புதுமைகளைச் செய்து வைத்திருக்கின்றாளோ என்பதைக் காண ஒருவகை அவா தோன்றி அவனை வதைத்தது. தான் சோதனை செய்த பகுதியின் மற்றொரு புறத்திலிருந்த ரவிக்கைகளின் கட்டையெடுத்து அவிழ்த்தான். ஒவ்வொன்றும், ரூபா 10, 15 பெறுமானமுள்ள 20,25 அழகிய இரவிக்கைகள் (கச்சுகள்) கண்ணைப் பறித்தன. ஒன்றை யெடுத்துப் பிரித்தான். உடனே அவளுடைய எழில்வழிந்த கைகளும், முதுகும், மார்பும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/167&oldid=1250217" இலிருந்து மீள்விக்கப்பட்டது