பக்கம்:மேனகா 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மேனகா

கழுத்தும் அவனுடைய அகக்கண்ணிற்குக் கண்கூடாகத் தோன்றி அவன் மதியை மயக்கின. “ஐயோ! என் இனிமை வடிவை எப்போது நேரில் காணப்போகிறேன்?” என்று நினைத்து ஏங்கினான். அந்தக் கச்சு மூட்டையை அப்படியே வாரிக் கண்களிலே ஒற்றிக்கொண்டு முத்தமிட நினைத்தான். அண்டையில் மனிதர் இருத்தலை யெண்ணித் தன்னை அடக்கிக் கொண்டான்.

கச்சு மூட்டையின் கீழ் வேலைப்பாடுகள் அமைந்த சாயப்பெட்டிகள் பல காணப்பட்டன. வட்ட வடிவமாய்த் தோன்றிய ஒரு பெட்டியை எடுத்துத் திறந்தான். வைரங்களும் சதங்கைகளும் நிறைந்த அவளுடைய தங்க ஒட்டியாணம், “பொய்யோ யெனுமிடையா”ளான தங்கள் செல்வச் சீமாட்டியைக் காணோமே யென்று ஏக்கம் கொண்டு அதில் படுத்திருந்தது. அரைமனதோடு அதைக் கீழே வைத்தான். யாவற்றிலும் பெரியதாய்க் காணப்பட்ட இன்னொரு பெட்டியைத் திறந்தான். வெள்ளை, சிகப்பு, பச்சை முதலிய நிறங்களில் விதைகளைக் கொண்ட மாதுளம் பழத்தைப் பிளந்தவாறு ஏராளமான ஆபரணங்கள் அதில் தோன்றி சுடர்விட்டெரித்தன. அவற்றை அவன் அதுகாறும் பார்த்தவனே யன்று; அவள் அவற்றை ஒரு நாளிலும் அணிந்ததைக் கண்டானில்லை. தமது புதல்வியின் பொருட்டு அவ்வாறு எவ்வளவோ பொருட்செலவு செய்துள்ள அவளுடைய பெற்றோர் அவளது வாழ்க்கையைக் கெடுக்க நினைப்பாரோ? சே! அப்படி நினைப்பது மூடத்தனம் என்று எண்ணினான். ஏராளமான வெள்ளி மைச்சிமிழ்களும், சாந்து வைத்த வெள்ளிக் கிண்ணங்களும், தந்தச் சீப்புகளும், முகம் பார்க்கும் கண்ணாடிகளும் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறைந்து இருந்தன. அவைகளைப் பார்த்தவுடன், அவனுடைய அகக்கண்ணிலிருந்த மேனகாவின் காதளவு ஓடிய மை தவழ் கண்களும், நெற்றியினிடையிலிருந்து அழகுபெற்ற கஸ்தூரித் திலகமும், சுருண்ட கருங் கூந்தலின் ஒளியும் அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/168&oldid=1250218" இலிருந்து மீள்விக்கப்பட்டது