பக்கம்:மேனகா 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

மேனகா

ஏராளமான மடந்தையர் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுதலைப்போலதபதபவென்று வெளிப்பட்டு விட்டனர். யாவரும் பத்துமுதல் பதினெட்டு வயதடைந்த பெண்பாவையராகவே இருந்தனர். அவர்கள் அற்புத அலங்காரத்துடன் வெளியில் தோன்றி, -

“மானினம் வருவபோன்றும், மயிலினம் திரிவபோன்றும்,
மீனினம் மிளிர்வபோன்றும், மின்னினம் மிடைவபோன்றும்,
தேனினம் சிலம்பியார்ப்பச் சிலம்பினம் புலம்பவெங்கும்,
பூநனை கூந்தன்மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார்”

என்றபடி தெருமுற்றிலும் நிறைந்தனர். திடீரெனத் தோன்றிய அந்தச் சகிக்கலாற்றாத காட்சியைக் கண்ட வராகசாமி மிக்க விரைவாகத் திரும்பி, வந்த வழியே ஒட முயன்றான். அங்கு அடுத்தடுத்திருந்த இரண்டு வீட்டு வாயில்களும் பள்ளிக்கூடத்து வாயில்களாதலால் பின்புறத்திலும் யெளவனப் பெண்டீரால் சூழப்பட்ட வராகசாமியின் மனோ நிலைமையை ஊகித்துக் கொள்வதே தகுதியின்றி அதை விவரிப்பது பலியா முயற்சியாம்.

அந்தத் தெருவே அப்போது மகா அழகுடையதாய் விளங்கியது. கண்கொள்ளா அலங்காரங்களுடன் பிரகாசித்த மங்கையர் யாவரும் புன்னகையும், சிரிப்பும், மிழற்றலும், மழலையுகுத்தலும், குழலையும் யாழையும் பழித்த குரலில் தேன் ததும்ப மொழிதலும் செய்துகொண்டு தாமரைத் தடாகத்திற் செறிந்த அம்புஜ மலர்கள் போலவும், ரோஜா வனத்தின் பூங்கொம்புகளில் அடர்ந்து நின்றசையும் ரோஜா மலர்களைப்போலவும் தோன்ற, முன் ஜென்மத்தில் மகத்தான புண்ணியம் செய்துள்ள அந்தத் தெருவானது உயிர்ப் பதுமைகளால் கொலுவைக்கப் பெற்ற ஒரு பெருத்த தர்பார் மண்டபத்தைப் போல விளங்கியது. ஆனால், வராகசாமியின் தேகம் ஒரு சாணளவாய்க் குன்றியது. நீந்த அறியாதவன் நீர்வெள்ளத்தில் தத்தளிப்பதைப் போலானான். அவனது மனதின் ஆத்திரம் மலையாய்ப்பெருகியது; அவனடைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/212&oldid=1250839" இலிருந்து மீள்விக்கப்பட்டது