பக்கம்:மேனகா 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மேனகா

வெற்றிலைப் பாக்குக் கடை வைக்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தான். ஆனால் டிப்டி கலெக்டரோ சிறிதும் களங்கமற்ற இருதயம் உடையவராதலால், அந்த நிகழ்ச்சியை அன்றோடு மறந்து விட்டார். அவனைத் தமது வீட்டைவிட்டு மாற்றாமலே வழக்கப்படி அன்பையும், கோபத்தையும் மாறிமாறிக் காட்டி வந்தார். இத்தகைய குணமுடையவர் தமது வீட்டில் மாத்திரம் அடங்கி ஒடுங்கி அன்னையின் மனதிற்கு விரோதமின்றி நடந்து வந்தார்.

முற் கூறப்பெற்றவாறு கோபத்தோடு சமையலறைக்குள் சென்ற கனகம்மாள் திரும்பவும் வெளியில் வந்தவள், “ஜாதகத்தை நன்றாக பாரடா பாரடாவென்று தலையிலடித்துக் கொண்டேன். ஏதோ காக்கை, குருவி கத்துகிறதென்று நினைத்தானே யொழியக் கொஞ்சமாயினும் அதைக் காதில் வாங்கினானா?” என்றாள்.

அதைக் கேட்ட சாம்பசிவ ஐயங்கார் பொறுமையாக, “ஆமாம்; வெள்ளைக்காரர்களெல்லாரும் ஜாதகம் பார்த்துத்தான் கலியாணம் செய்கிறார்களோ? அவர்களில் ஸ்திரீ புருஷர் சண்டையில்லாமல் அன்போடு ஒற்றுமையாய் வாழவில்லையா? அதெல்லாம் பைத்தியந்தான். நொண்டி வழியால் முயல் போய்விட்டதாக்கும்” என்று மெதுவாக முணுமுணுத்தார்.

கனகம்:- வெள்ளைக்காரனைப் பார்த்துப் பார்த்துத்தானே அநியாயமாய் நம்முடைய தேசமே நாசமாய்ப் போய் விட்டது. ஆனால் அது அவனுடைய குற்றமன்று; உங்களுடையது. நாம் அவனுடைய வழக்கத்தைப் பின்பற்றினால், முற்றிலும் அதையே செய்தல் வேண்டும். இல்லையாகில், நம்முடைய பழக்கவழக்கத்தை விடக்கூடாது; வெள்ளைக்காரன் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில்லை; ஆகையால்; அதை நீங்களும் செய்ய முயலுகிறீர்கள்; ஆனால் அவர்கள் பக்குவமடைந்த பெண்ணையும், பிள்ளையையும் ஒருவரோடு ஒருவர் ஐந்தாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/22&oldid=1248089" இலிருந்து மீள்விக்கப்பட்டது