பக்கம்:மேனகா 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பசிவ ஐயங்கார்

5

மாதகாலம் பழகும்படி விடுத்து அவர்களுடைய மனமும், குணமும் பொருந்துகின்றனவா வென்று பார்க்கிறார்களே அப்படி ஏன் நீங்கள் செய்கிறதில்லை? உங்களுடைய காரியமே எப்போதும் பாதிக்கிணற்றைத் தாண்டுவதுதானே. நாம் பாலிய விவாகம் செய்வது நலமென்று வைத்திருக்கிறோம்; பெண்ணும் பிள்ளையும் ஒற்றுமையாய் வாழ்வார்களா வென்பதை அப்போது அநுபவத்தில் அறிய முடியாதாகையால் ஜாதகத்தின் மூலமாக அறிய முயல்கிறோம். அவர்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை கிடையாது; பெண்களையும் பக்குவமடைந்த பிறகே மணம் செய்விக்கிறார்கள். ஆகையால், கைப்புண்ணிற்குக் கண்ணாடி எதற்கு? ஏட்டின் மூலமாய் அறிதலை விட அநுபவத்திலேயே விடுத்துப் பார்த்து விடுகிறார்கள். அதுவும் நல்ல ஏற்பாடுதானே; இல்லற வாழ்க்கை என்பது கணவன், மனைவி யென்னும் இரண்டு மாடுகளால் ஒற்றுமையாக இழுத்து நடத்தப்படும் வண்டி யல்லவா? நம்மிடமுள்ள மாடும் நாம் புதிதாய்க் கொள்ளப்போகும் மாடும் ஒருமணப்பட்டு உழைக்கின்றனவா என்பதை அறிய நாம் அவற்றை வண்டியிற் பூட்டிப் பார்ப்பதில்லையோ? மனமொத்து வாழ்வதற் குரிய காரியமல்லவா? நாம் நம்முடைய பெண்ணின் மீது ஆண் காற்றுவீசுதல் கூடாதென நினைக்கிறோம். வெள்ளைக்காரர்கள் நீடித்த பெருத்த லாபத்தைக் கருதி அற்பக் கேட்டைப் பொருட்படுத்தவில்லை; ஒரு பெண் தனக்குக் கணவனாக வரிக்கப்படும் மனிதனோடு சொற்பகாலம் ஒருமித்துப் பழகுவதினால் என்ன கெடுதி சம்பவிக்கப் போகிறது? அவள் ஒருவனிடம் திருப்தியாக நடக்கத் தவறினும், அவனிடத்திற் கற்ற பாடத்தை இன்னொருவரிடத்தி லாயினும் ஒழுங்காக ஒப்புவிப்பா ளன்றோ? அவர்கள் காரியவாதிகள். நீங்களோ இரண்டிலும் சேராமல் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் சேர்த்துக்கொண்டு திரிசங்குவின் சுவர்க்கத்திலிருக்கிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/23&oldid=1248090" இலிருந்து மீள்விக்கப்பட்டது