பக்கம்:மேனகா 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

மேனகா

கற்றுக்கொள்ளுங்கள்” என்று சரமாரியாகத் தூற்றிக்கொண்டே மேலும் நடந்தான். ஊருக்குள்ளிருந்து இத்தகைய இழிவான காட்சிகளைக் காண்பது அவனுக்கு மிகவும் துன்பகரமாக இருந்தது. மிக்க விரைவாய் நடந்து கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்து ஜனங்கள் இல்லாத ஓர் இடத்தில் கிடந்த கட்டு மரங்களின் இடுக்கில் படுத்துக்கொண்டான். கடற்கரையின் மாலைக் காட்சி நிரம்பவும் மனோக்கியமாக இருந்தது. நற்குண நல்லொழுக்கம் உடையோர், தமது இனிய சொற்களாலும், செயல்களாலும், தம்மிடத்தில் நெருங்கு வோரின் மனதைக் கவர்தலைப்போல, கடலின் குளிர் காற்று நல்லவர் என்றும் தீயவர் என்றும் பட்சபாதம் காட்டாமல் ஜிலுஜிலென்று வீசி, யாவரையும் மகிழ்வித்து இன்பமயமாக்கி எத்தகைய தீராத மனோ வேதனை கொண்டோரும் ஒரு சிறிதேனும் தமது துன்பத்தை மறக்கும்படி செய்தது. இராமபிரான் சீதா தேவியாரை இழந்த பின்னர், அவரைக் காண்பேனா வென்று பெரிதும் ஏங்கி, வானர சைனியங்களை நான்கு திக்குகளிலும் விடுத்துத் தேடச் செய்து மனமுடைந்து நம்பிக்கை யற்றிருந்த காலத்தில், “கண்டேன் ஜானகியாரை” என்று ஆஞ்சநேயர் திடீரென்று தோன்றிக் கூறியதைப் போல, “இவ்வளவு தானா இந்த உலகத்தின் இன்பம்! வாழ்க்கை ருசியற்றதாகப் போய்விட்டதே! எத்தனையோ அண்டபிண்ட சராசரங்களையும் படைத்த எல்லாம் வல்ல ஈசன் மனிதர் நீடித்து அநுபவிக்கும்படி தெவிட்டாத ஒரு சுகத்தைப் படைக்க வில்லையே!” என்று நினைத்து நம்பிக்கையற்று அருவருப்பான வாழ்க்கை செய்துவரும் விவேகிகளைப் பார்த்து, “சே! பயப்படாதேயுங்கள்; இந்த உலகத்தின் அற்பமான இன்பங்களைத் தவிர உயர்வான இன்பம் ஒன்று இருக்கிறது; நான் அந்த பேரின்ப உலகத்திலிருந்துதான் வருகிறேன்; ஆசாபாசங்களாகிய இராவணனுடனும் அவனுடைய சுற்றத்தாருடனும் போர் செய்துவந்து உங்களுடைய சுகத்தை அடையுங்கள்” என்று மந்தமாருதம் மெல்லிய குரலில் ஒவ்வோருவர் செவியிலும் செய்தி சொல்லியது. காதலிமார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/220&oldid=1250851" இலிருந்து மீள்விக்கப்பட்டது