பக்கம்:மேனகா 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

203

தமது காதலருக்கு அனுப்பும் இரகசியமான கடிதங்களுக்கு வாசனை யூட்டி அனுப்புதல் போல், தூதாய்வந்த கடற்காற்றில் இனிமை கமழ்ந்தது. சிறுவர்கள் பைத்தியங் கொண்டவரைப் போலத் தம்மை மறந்து குதித்தாடினர். சிறியோரும் பெரியோரும் அலைகள் மோதும் இடங்களில் மிகவும் துணிவாக நின்று, அலைகள் வரும்போது பின்னால் ஒடியும், அவைகள் போகும்போது துரத்தியும் சூரப்புலிகளாய் தோள்தட்டி நின்றனர். அப்போது தரைக்குள்ளிருந்து இரதங்களைப்போல அங்கு புறப்பட்ட நண்டுகள் அவர்களைக் கண்டு பரிகாசம் செய்வன போல அலைகள் வரும்போதும் மனிதர் வரும்போதும் மண்ணிற்குள் பதுங்கியும், போன பின் வெளியில் வந்தும் ஏளனம் செய்தன. ஆண்பாலரும் பெண்பாலரும் எங்கும் கும்பல் கும்பலாக நின்று கொண்டு அவரவர்கள் மனதிற்கு உகந்தவற்றில் கவனத்தைச் செலுத்தினர். இளங்காதலன் உலகமெல்லாம் தன் மனைவியிடத்திலேயே இருக்கிறதென்று நினைத்து இறுமாப்படைந்து நடந்தான். அவனது காதலியோ கடைக்கண்ணால் தனது கணவனைப் பார்த்துப் பார்த்து அவனே கற்கண்டு மலையென நினைத்து, அடக்கிய புன்னகை தனது முகத்தில்தவழ பெருவிரலை நோக்கி நடந்தாள். குழந்தைகளின் நாட்டமோ விளையாட்டிலும், அங்கு விற்கப்பட்ட கமலாப்பழத்தின் மீதும் சென்றது. காமாதுரனது நாட்டமோ அயலான் மனைவியின்மீது சென்றது. திருடனது நினைவு மனிதருடைய இடைகளை ஆராய்ந்தது. மீன் தின்பவனது நினைவு, எவ்விடத்தில் வலையன் தனது கட்டு மரத்தோடு கரையேறுகிறான் என்று கவனித்தது. மூக்குப் பொடி போடுகிறவன் ஒரு தடவைக்குத் தேவையான பொடியைப் பெறும்பொருட்டு புதிய மனிதரிடம் நட்புப் பாராட்டி யோக க்ஷேமம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

காமாலை கொண்டவனுக்கு உலகமே மஞ்சள் நிறமுடையதாய்த் தோன்றுதலைப்போல ஒவ்வொரு வனுக்கும், அவனவனுடைய மனதின் அளவே உலகமாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/221&oldid=1250854" இலிருந்து மீள்விக்கப்பட்டது