பக்கம்:மேனகா 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மேனகா

உண்டானது; அவர் வண்டியை வேகமாய் செலுத்தும்படி வண்டிக்காரனிடம் கூறினார். அப்போது எதிரில் மிக்க அருகில் இன்னொரு மோட்டார் வண்டி வந்து கொண்டிருந்தது. இவர்கள் இருந்த வண்டிக்காரன் தனது வண்டியைச் சற்று கிழக்குப்பக்கம் விசையாக ஒதுக்கி வேகமாய் முடுக்கிவிட்டான். அதை எதிர்பாராத வராகசாமி, தனது கைப்பிடி வண்டிக்கு எட்டாமல் தவறிப் போனமையால், படேரென்று கருங்கல்லுடன் பாட்டையில் குப்புற விழுந்தான்; நாற்புறங்களிலும் தூரத்திலிருந்த மனிதர் அதைக் கண்டு,"ஐயோ! ஐயோ!” வென்று பெருத்த கூக்குரல் செய்து ஓடிவந்தனர். எதிரில் வந்த மோட்டார் வண்டி நிற்பதற்கு போதுமான சாவகாச மில்லாமையால் வராகசாமியின் உடம்பில் ஏறிப் போய் விட்டது. ஜனங்கள் பெரிதும் கூக்குரல் செய்து ஓடிவந்து சேருமுன் வண்டிகள் இரண்டும் மாயமாய்ப் பறந்து போய் விட்டன. பெரிதும் அச்சமடைந்தவராய் இரண்டு வண்டிக்காரர்களும் வாயுவேக மனோவேகமாய் வண்டிகளை ஒட்டிக்கொண்டு போயினர். ஓடிவந்து அங்கு கூடிய ஜனங்கள் உணர்வற்றவனாய் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடந்த வராகசாமியைத் தூக்கி யெடுத்தனர். அந்தக் கூட்டத்திலிருந்த சாமாவையர் பதைபதைத்தவராய், அப்போது வந்த இன்னொரு மோட்டார் வண்டியை நிறுத்தச் செய்து, அதில் வந்த மனிதரை நயந்து வேண்டி அதில் வராகசாமியை வைத்து, இராயப்பேட்டை சர்க்கார் வைத்தியசாலைக்கு ஒட்டச் செய்தார்.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/228&oldid=1250882" இலிருந்து மீள்விக்கப்பட்டது