பக்கம்:மேனகா 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

209

இருக்குமென்று நினைத்தான். ஆகையால், அவளைக் கொன்றுவிடுவதே யாவற்றிற்கும் மருந்து என நினைத்தான். அவளைக்கொன்றபின் தானும் நியாய ஸ்தலத்திற்குப் போய்க் கொல்லப்பட்டுப் போவதே புகழுடைத் தென்றும், செயலற்ற பேதைபோல அஞ்சி காசிக்குப் போய் சந்நியாசம் பெற்று ஒளிந்து திரிவதிற் பயனில்லையென்றும் ஒரு கடினத்தில் தீர்மானம் செய்து கொண்டான். கீழே குனிந்து அங்கு மிங்கும் நோக்கினான். சற்று துரத்தில் ஒரு தேங்காய்ப் பருமனிருந்த ஒரு கருங்கல்லைக் கையில் எடுத்துக் கொண்டான். அதற்குள் மோட்டார் வண்டி அவனைத் தாண்டித் தென்புறத்தில் பத்துப் பதினைந்து கஜதுரம் போய்விட்டது. கையில் கல்லுடன் அவனும் திரும்பி வண்டியை நோக்கி விசையாக ஒடினான். அந்த மோட்டார் வண்டியின் பின்புறத்திலிருந்த ஒரு தகட்டில் காலை வைத்தேறி, அருகில் காணப்பட்ட மேனகாவின் தலையில் அந்தக் கருங்கல்லை ஓங்கி மோதி மண்டையை உடைத்து அவளைக் கொன்றுவிட்டு இறங்கிவிட நினைத்தவனாய் விரைந்து ஓடினான். வண்டி மெல்லப் போனதாயினும், அது ஒரு ஆளின்வேகம் இருந்ததால், அவன் அதை நெருங்க நெடுந்துாரம் செல்லவேண்டியிருந்தது. களைப்பையும் பாராமல் தன் முழு வலுவையும் செலுத்தி ஓடினான். வண்டியும் சென்றது. அவ்வாறு ஐம்பது கஜதுரம் சென்றான். அடுத்த நிமிஷம் அவன் மோட்டாரை ஒரு கையாற் பிடித்துக்கொண்டு, கீழிருந்த தகட்டில் ஏறியிருப்பான். இன்னொரு நொடியில் மேனகாவின் அழகு வழிந்த முகத்தை இரத்த வெள்ளம் வழிந்து மறைத்திருக்கும் கருங்கல் அவளுடைய சிரத்தை உடைத்துச் சின்னா பின்னமாக்கி இருக்கும். முகமூடி போட்டிருந்த மனிதரும் தென்முகமாய் மேனகா வுடன் இருந்தமையால், பின்னால் ஓடிவந்த வராகசாமியை அவரும் பார்க்கவில்லை. அந்தச் சமயத்தில், தெய்வச் செயலாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வீட்டுக்குப் போக நேரமாய் விட்டதாகையால், விரைவாகப் போகவேண்டும் என்னும் நினைவு முகமூடி போட்டிருந்தவர் மனதில்

மே.கா.I–15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/227&oldid=1250989" இலிருந்து மீள்விக்கப்பட்டது