பக்கம்:மேனகா 1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

255

கொள்ளாமல் போய்விட்டாளே என்று வருத்தப் பட்டாள். ஒருவேளை அவர் எங்கேயாவது அறிமுகமான இடத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு போயிருப்பார் என்றும், திரும்பவும் கொணர்ந்து விட்டுவிடுவார் என்றும், கவலைப் படவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு நான் என் கிரகத்துக்குப் போய்விட்டேன்; மேனகா பிறகு இதுவரையில் வரவே இல்லை- என்றார். அவர்கள் இருவரின் வாக்குமூலங்களையும் காகிதத்தில் எழுதிக்கொண்டே வந்த இன்ஸ்பெக்டர் அடியில் அவர்களுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டுப் போனார். சாமாவையர் திரும்பவும் விதவை களோடு பேசிக்கொண்டிருந்தார்.

வெளியிற் சென்ற இன்ஸ்பெக்டர் தமது கைக் கடிகாரத்தைப் பார்த்தார்; எட்டு மணி ஆகியிருந்தது. வாசலிலிருந்த இரண்டு ஜெவான்களையும் அழைத்துக் கொண்டு அவர் எதிர்த்த வீட்டின் திண்ணைக்குப் போய் உட்கார்ந்து கொண்டார். அந்த மூன்று செந்தலைப் பூச்சிகளையும் கண்ட அவ்வீட்டு மனிதர் தமக்கு எத்தகைய துன்பம் நேரப்போகிறதோ வென்று பெரிதும் அச்சங்கொண்டு நடு நடுங்கி, செய்யவேண்டுவதை அறியாமல், உள்ளேயே உட்கார்ந்து விட்டனர். அண்டை வீட்டுக்காரர்கள் யாவரும் ஒன்றுகூடி மகா புத்திசாலித்தனமான பல யூகங்களைச் செய்யலாயினர். போலீசார் உட்கார்ந்திருந்த வீட்டிற்குள் ஏதோ திருட்டுச் சொத்திருப்பதாகவும், அந்த வீட்டைப் போலீசார் சோதனை போடப்போகிறார்கள் என்றும் அந்த வீட்டில் உள்ளோரைக் கைதி செய்து விலங்கிட்டுக் கொண்டுபோகப் போகிறார்கள் என்றும் பலவாறு கூறிப் புரளி செய்திருந்தனர். எவரும் தம் தம் வேலையைக் கவனிக்கவே மனமற்றவராய், அவ்விடத்தில் நடக்கப்போவ தென்ன என்பதைப் பார்க்க ஆவல்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

கால்மணிநேரம் கழிந்தது. அப்போது ஒரு குதிரைவண்டி ஜல் ஜல் ஜல் என்று சதங்கையோசை செய்துகொண்டு வந்தது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/273&oldid=1251355" இலிருந்து மீள்விக்கப்பட்டது