பக்கம்:மேனகா 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

257

காணப்படவில்லை. அதிகாலையில் தனது இளங்கன்றை விடுத்துப்பிரிந்த பசு மாலையில் கன்றைப் பார்க்க ஆவலும் இரக்கமும் கொண்டு ஓடி வருதலைப் போல வராகசாமியின் வீட்டைக் கண்டவுடனே அவர்களுடைய உள்ளம் பொங்கி எழுந்து பதறியது. மேனகா இருக்கமாட்டாளே என்று அவர்களுடைய மனது நம்பவில்லை. உள்ளே நுழைந்தவுடன் அவளைக் காணலாம் என்னும் மூடநம்பிக்கை கொண்டவராய், வண்டியிலிருந்து இறங்கி உடபுறம் விரைந்து சென்றனர்.

வண்டிக்காரன் வண்டியை ஒட்டிச் செல்லாமல், அவ்விடத்திலேயே அதை நிறுத்திக்கொண்டிருந்தான். எதிர்த்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்த போலீஸ் இன்ஸ் - பெக்டர் சைகைசெய்து வண்டிக்காரனை அழைத்தார். அவன் இன்ஸ்பெக்டரிடம் பன்முறை சூடுண்டவன். ஆதலின், எமனைக் கண்ட உயிரைப்போல, அவன் நடுநடுங்கி ஓடி வந்து, எண் சான் உடம்பையும் ஒரு சாணாய்க் குறுக்கிக் குனிந்து சலாம் செய்தான்.

மகா கம்பீரமாகவும் அலட்சியமாவும் அவனைப் பார்த்த இன்ஸ்பெக்டர், “அடே தாடிமியான்! என்னடா ஜோர்மேலே ஒட்டுகிறாய்? இரட்டைக் குதிரை சவாரியோ? சிவப்புக் குதிரை மேலே வண்டி; வெள்ளைக் குதிரைமேலே நீ! நல்ல வேட்டை தானோ? எங்கிருந்து வருகிறாய்? கூலி ஒரு ரூபாயாவது இருக்குமா?” என்றார்.

வண்டிக்காரனுக்கு அடி வயிற்றில் நெருப்பு விழுந்தது. தான் வண்டியை மிதமிஞ்சிய விசையில் ஒட்டினதாக அவர் எழுதி தனக்கு பத்து இருபது அபராதம்போட்டு வைப்பாரோ வென்று நினைத்து அச்சங்கொண்டவனாய், “இல்லே நாயனா! ஏளேமேலே கோவம் வைக்காதிங்க நாயனா! நம்பிளுக்கு புள்ளே குட்டீங்கோ பத்து பதினஞ்சு இருக்கான், பஞ்சகாலம் நாயனா! ஒங்க காலுக்கு நம்ப சலாம் செய்யறான் நாயனா!

மே.கா.I–18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/275&oldid=1251357" இலிருந்து மீள்விக்கப்பட்டது