பக்கம்:மேனகா 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

மேனகா

மனசுலே கோவம் வைக்கவேணாம் நாயனா! வண்டி எளும்பூரிலே யிருந்து வந்திச்சு நாயினா! வண்டியிலே வந்தவரு தஞ்சாவூரு துப்பட்டி கலையக்கட்டராம் நாயனா! இன்னேக்கி முளுக்க வண்டி பேசியிருக்கான் நாயனா ரெண்டேரூவாதான்; அதிக மில்லிங்கோ நாயனா” என்ற தனது பற்களைக் காட்டிக் காட்டிக் கெஞ்சிக் கூத்தாடினான்.

அதைக்கேட்ட போலீஸ் இன்பெக்டர் வியப்பைக் கொண்டவரைப்போலக் காட்டி “ஒகோ! தஞ்சாவூர் டிப்டி கலெக்டரா வந்திருப்பவர்! இவருடன் நான் அவசரமாகப் பேசவேண்டும். நல்லது நீ ஒரு வேலை செய்; இவர் மறுபடியும் வண்டியில் ஏறியவுடன் இவரிடம் சொல்லாமல் வண்டியை நம்முடைய ஸ்டேஷன் வாசலுக்குக் கொண்டுவா. நாங்கள் பேசிய பிறகு நீ அவர் போகச் சொன்ன இடத்துக்கு ஒட்டலாம், தெரியுமா? நான் போகலாமா? இந்த ஜெவான்களை இங்கே வைத்துவிட்டுப் போகிறேன்; வராமல் தவறி ஒட்டிக் கொண்டு போவாயானால் முதுகு தோலை உரித்து விடுவேன், ஜாக்கிரதை” என்றார்.

வண்டிக்காரன் குனிந்து குனிந்து சலாம் செய்து, “அப்பிடியே ஆவட்டும் நாயனா! நம்பளோட ரோக்கியம் இதுல பாரு நாயனா! நாம்ப முசல்மான் நாயனா! நம்ப வாயிலே பொய் வரமாட்டான் நாயனா! நீங்க போவலாம் நாயனா!” என்றான்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெவான்களிடம் ஏதோ இரகசியமாகப் பேசிய பிறகு அவர்களை அவ்விடத்தி லேயே உட்காரவைத்து விட்டு தம்முடைய ஸ்டேஷனுக்குச் சென்றார். வண்டிக்காரன் வராகசாமி வீட்டு வாசலையடைந்து அன்றைப் பொழுது அபராதம் இல்லாமல் நல்ல பொழுதாய்ப் போகவேண்டுமே யென்று அல்லாவைத் தொழுது கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/276&oldid=1251358" இலிருந்து மீள்விக்கப்பட்டது