பக்கம்:மேனகா 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

மேனகா


மிகவும் பதைபதைத்து நின்ற கனகம்மாள், “இதைப் போலீஸில் எழுதி வைத்தீர்களா?” என்றாள்.

சாமா:- வராகசாமி எழுதிவைக்க வேண்டாமென்று சொல்லி விட்டான்.

சாம்ப:- ஏன்? - என்றார்.

அதற்குமேல் பதிற் சொல்லமாட்டாமல் சாமாவையர் தயங்கினார்; கனைத்துக்கொண்டார்; இருமினார்; எச்சிலை விழுங்கினார்; அப்புறம் திரும்பினார்; ஆகாயத்தைப் பார்த்தார்; பூமாதேவியைக் கடாட்சித்தார்; சமையலறையைக் கடைக் கணித்தார்; கடைசியாக மெளனம் சாதித்தார். சாம்பசிவம் அத்துடன் விடுபவரல்லர் “போலீசில் பதிவு செய்யும் படி நான் தந்தியில் கூட தெரிவித்தேனே; அதைச் செய்யாத காரணமென்ன?” என்று அதே கேள்வியைக் கேட்டார். -

சாமா:- உங்களுடைய தந்தியைப் பார்த்தவுடன் அன்றைக்குப் பெட்டி வண்டியில் வந்தது நீங்களல்ல வென்று நிச்சயித்தோம். ஆனால், மேனகா எப்படித்தான் போயி ருப்பாள் என்பதைப் பற்றி வராகசாமி எண்ணாததெல்லாம் எண்ணிப்பார்த்தான். அப்போது அவனுக்கு ஏதோ சந்தேகம் உதித்தது. மேனகாவின் டிரங்குப் பெட்டியை உடைத்துப் பார்த்தான்; அதில் ஏதோ இரண்டு கடிதங்கள் அகப்பட்டனவாம். அதைப் பார்த்தவுடன், அதில் பல இரகசியங்கள் வெளிப்பட்டனவாம். அதன்மேல், அவன் போலீஸில் எழுதிவைக்க வேண்டாமென்று நிறுத்திவிட்டான் -என்றார். அதைக்கேட்ட அவ்விருவரின் பைத்தியமும், ஆவலும் உச்ச நிலையை அடைந்தன, சிரம் சுழன்றது; அந்த வீடே கிரு கிரென்று சுற்றி மேலே கிளம்புவதாய்த் தோன்றியது. புத்தியின் தெளிவை இழந்து மேலே கேட்கவேண்டுவ தென்ன என்பதை அறியாமல் சோர்ந்தனர்.

சாம்ப:- என்ன கடிதங்கள்? யாருக்கு யாரால் எழுதப்பட்ட கடிதங்கள்? அதில் அப்படி என்ன பரம இரகசியத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/282&oldid=1251364" இலிருந்து மீள்விக்கப்பட்டது