பக்கம்:மேனகா 1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

265

கண்டீர்கள்? எங்கே அந்தக் கடிதங்கள்? நான் படித்துப் பார்க்கிறேன் - என்று அருவருப்போடும் அடக்கிய கோபத்தோடும் கேட்டார்.

சாமா:- (மிகவும் பணிவாக) அண்ணா! அதை மாத்திரம் நீங்கள் என்னிடம் கேட்கவேண்டாம்; கடிதங்கள் வராகசாமி யிடத்தில் வைத்தியசாலையில் இருக்கின்றன. நேரிலேயே பார்த்துக்கொள்ளுங்கள்; இந்த விஷயத்தில் மாத்திரம் தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும்- என்றார்.

சாம்ப:- (பொங்கியெழும் ஆத்திரத்தோடு) என்ன ஐயா! இவ்வளவு தூரம் சொன்னவர் பாதிக் கிணற்றில் விட்டதைப் போல முக்கியமான இடத்தில் மறைக்கிறீரே எங்கள் மனம் தவிக்கிறது உமக்குக் கொஞ்சமும் தெரியவில்லையா? வீணாக இன்னமும் வேடிக்கை பார்க்கவேண்டாம். மிகுதி விஷயத்தை யும் சொல்லும். எப்படியும் அதை நாங்கள் அறிந்துகொண்டே தீரவேண்டும். நடந்ததைச் சொல்ல உமக்கென்ன யோசனை? அதனால் உம்மீது யார் என்ன குற்றம் சொல்லப் போகிறார்கள்? பாதகமில்லை, சொல்லும்; அது எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்- என்றார்.

சாமாவையர் பற்களைக் காட்டிக் கெஞ்சி, “இல்லை அண்ணா. அதை மாத்திரம் நீங்கள் மற்றவர்களிடத்திலேயே கேட்டுக்கொள்ளுங்கள். அதை வாயில் வைத்துச்சொல்லவும் எனக்கு மனமில்லை; இப்போது இன்னம் ஐந்தே நிமிஷத்தில் நாம் ராயப்பேட்டை வைத்தியசாலைக்குப் போனால் கடிதங்களையே நீங்கள் பார்க்கலாம்” என்று பிடிவாதமாகப் பேச அவர்கள் மிகுந்த ஆயாசமும், ஆத்திரமும் அடைந்தனர். அவர்களது ஆவல் மகா உக்கிரமாக எழுந்து அவர்களது நெஞ்சையும் தேகத்தையும் படீரெனக் கிழித்துவிடுமோ வென்னத்தகுந்த விசையையும் பருமனையும் அடைந்தது. கோபம் தேகத்தையே நெருப்பாய்ப் பற்றி எரித்தது. ஆனால், அதை யார் மீது காட்டுவது? சாமாவையர் அன்னிய மனிதர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/283&oldid=1251365" இலிருந்து மீள்விக்கப்பட்டது