பக்கம்:மேனகா 1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

மேனகா

வராகசாமியின் வீட்டில் புண்ணியத்திற்கு உழைப்பவர். ஆகையால், அவரை மேலும் வற்புறுத்த சாம்பசிவத்திற்கு மனமில்லை. இரண்டு கைகளுமற்ற மனிதன் முஷ்டியுத்தம் செய்ய நினைத்ததைப்போல அவருடைய அடங்காக் கோபம் வீணில் ஜ்வலித்தது. “சரி; அப்படியானால், போவோம் எழுந்திரும்” என்றார் சாம்பசிவம். இருவரும் எழுந்தனர்.

அதற்குள் கனகம்மாள் சமையலறைப் பக்கம் போய் உள்ளே எட்டிப்பார்த்து, “பெருந்தேவியம்மா! என்ன செய்கிறாய்? இப்படி வா அம்மா! என்ன இது கூத்தாக இருக்கிறதே! பெண்ணை யார் அழைத்துக் கொண்டு போனது? நீங்கள் ஒருவரும் பார்க்கவில்லையா? அந்தச் சேவகன் யார்? விவரமாகச் சொல்லம்மா!” என்று தனது ஆத்திரத்தை யெல்லாம் அடக்கிக்கொண்டு நயமாகக் கேட்டாள்.

பொறுப்பதற்கு இயலாத துர்நாற்றத்தைக்கண்டு முகத்தைச் சுளித்துக் கொள்பவள் போல பெருந்தேவியம்மாள் தனது முகத்தை விகாரப்படுத்திக்கொண்டு அருவருப்பாக, “ஆம்; கூத்துதான்! அது எங்களுக்கு எப்படித் தெரியப் போகிறது? கூத்தைப் பார்க்கிறவர்களுக்கும் கூத்தாடிகளைப் பார்க்கிறவர்களுக்குந்தான் நிஜம் தெரியும்; எங்களுக்கென்ன தெரியும்” என்று ஒன்பது முழம் நீட்டிப் பேசினாள். அவளுடைய முகமும் உதடுகளும் கைகளும் யாவும் நீண்டன. “வா, உட்கார்” என்ற மரியாதையும் இல்லாமற் போனதன்றி தன் வீட்டில் வந்து அல்லல் கொடுக்கும் பிச்சைக்காரரை அவமதித்துப் பேசுபவளைப் போல மொழிந்தாள் பெருந்தேவியம்மாள்.

கனகம்மாள் தங்களுடைய பொல்லாத காலத்தை நினைத்துத் தனது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “என்ன இது? நீ சொல்வதொன்றும் விளங்கவில்லையே! நடந்ததை விவரமாகச் சொல்லம்மா! பெண்ணை அழைத்துப் போனது யார்? ஏதோ கடிதம் அகப்பட்டதாமே; அது என்ன கடிதம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/284&oldid=1251366" இலிருந்து மீள்விக்கப்பட்டது