பக்கம்:மேனகா 1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

267

என்று திரும்பவும் நயமாகக் கேட்டாள்.

பெருந்தேவி முன்னிலும் அதிகரித்த எரிச்சலைக் காட்டி, “பெண் சங்கதிதான் ஊர் சிரிக்கிறதே! அவளால், நாங்கள் எல்லோரும் மூடி முக்காடிட்டு உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கும்படி ஆய்விட்டதே! வராகசாமி இதைக் கேட்டு தற்கொலை செய்துகொள்ளத்தானே மோட்டார் வண்டியின் கீழ் தன்னுடைய கழுத்தைக் கொடுத்தான்; அப்படியல்லவோ செய்துவிட்டாள்! பெண்ணிருந்தாலும் இப்படித்தான் இருக்கவேண்டும்! இந்தப் பெண்ணைப் பெற்ற வயிற்றில் பிரண்டையை வைத்துக் கட்டிக்கொள்ளலாம். இப்படிப்பட்ட பெண்ணிருந்தால் ஏழேழு தலைமுறைக்கும் போதும். அடாடா! இருந்திருந்து நல்ல இடத்தில் சம்பந்தம் செய்துகொண்டோம்! இனி எங்கள் வீட்டில் நாய் கூட தண்ணீர் குடிக்காது. அநியாயமாக எங்கள் குடியைக் கெடுத்துவிட்டாள் கொழுப்பெடுத்த முண்டை” என்றாள்.

அந்தச் சொல் உருக்கிய இரும்பைப் பெய்தலைபோல, கனகம்மாள், சாம்பசிவம் ஆகிய இருவரின் செவிகளிலும் நுழைந்தது. அவர்களது தேகம் கட்டுக்கு அடங்காமல் பதைபதைத்தது. ஒரே அடியில் பெருந்தேவியின் மண்டையை சுக்கல் சுக்கலாக உடைக்கக்கூடிய மூர்க்கத்தை அடைந்தனர். கோபமூட்டப்பெற்ற புலிகளைப்போல நின்ற கனகம்மாள், “பெருந்தேவியம்மா! என்ன தாறுமாறாகப் பேசுகிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்பதைக்கூட மறந்துவிட்டாயே! நடந்த விஷயத்தையும் சொல்லமாட்டேனென்கிறாய்; நினைத்தவிதம் எங்களை தூஷிக்கிறாய்! இதனால் உங்களுக்கு மாத்திரமே துக்கமும் வெட்கமுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது! அருமையாக வளர்த்த எங்களுடைய குழந்தை போய்விட்டது; எங்கள் மாப்பிள்ளையின் உயிருக்கு ஆபத்து வந்தால், அதில் எங்களுக்கு விசனம் இல்லையா? உங்களுடைய விசனத்துக்கு எங்களுடையது குறைந்த தென்று நினைத்துக்கொண்டாயா? நீ எங்களை எதிரிகளைப்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/285&oldid=1251367" இலிருந்து மீள்விக்கப்பட்டது