பக்கம்:மேனகா 1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

மேனகா

நினைத்து ஆத்திரமாய்ப் பேசுவதேன்? குழந்தை எங்கு தவிக்கிறாளோ! அவளையல்லவோ நாம் இருவரும் சேர்ந்து கண்டுபிடிக்க வேண்டும்; இந்தச் சமயத்தில் நீயும் நானும் சேர்ந்து சண்டையிடுவதா அழகு? - என்றாள்.

பெருந்தேவி மிகுந்த அருவருப்பைக் காட்டி வலது கையால் மோவாயில் வியப்புக் கொக்கி மாட்டி, “குழந்தையாமே குழந்தை! நல்ல குழந்தை! வாயில் விரலை வைத்தால் அந்தக் கோந்தைக்குக் கடிக்கக் கூடத் தெரியாது பாவம்! அந்தக் கோந்தை தவிக்கிறதோ? நல்ல தடிப்பய லோடே உல்லாசமாகப் பொழுதுபோக்கித் தவிக்கிறதோ? அவள் போன இடம் தொயாதோ? தஞ்சாவூரில் ஒரு வருஷம் வைத்துக்கொண்டு நாடகக்காரனுக்குக் கூட்டிக்கொடுத்த உங்களுக்கு அவள் போன இடம் தெரியாதோ? காக்கை பிடிக்கிற பைத்தியக்காரியைப் போல, என்னைக் கேட்க வந்துவிட்டாயோ? அப்பா! பொல்லாக் கும்பல்! மகா பட்டிக்கும்பலென்று தெரிந்து கொள்ளாமலல்லவா மதி மோசம் போனோம்” என்று ஏழு மேகங்களும் ஒன்றுகூடி கிடுடாயமான இடிகளை உருட்டி விடுதலைப்போல மொழிந்தாள். அந்த கன்னகடூரமான சொற்களைக் கேட்ட சாம்பசிவம் வீராவேசங் கொண்டு தம்மை முற்றிலும் மறந்து பாய்ந்து எதிரில் கிடந்த அம்மிக் குழவியைக் கையிலெடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைய, சாமாவையர் குறுக்கில் விழுந்து மறைத்து அம்மிக்குழவியை வாங்கி அவரையும் கூடத்திற்கு இழுத்துவந்தார். நெருப்புக் கடலில் நீந்திய கனகம்மாள் அழுத்தமாக, “அடி பெருந்தேவி! நாக்கை உள்ளே வைத்துப் பேசு, தாறுமாறாக உளறாதே; என்ன நடந்ததென்று கேட்டோம். ஒழுங்காகச் சொல்ல மன மிருந்தால் சொல்; இல்லாவிட்டால், சொல்ல மாட்டே னென்று சொல்லிவிடு; நாங்கள் அறிந்துகொள்ளும் விதத்தில் அறிந்தகொள்ளுகிறோம். உனக்குத்தான் வாயிருக்கிறதென்று பேச்சை ஒட்டாதே” - என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/286&oldid=1251368" இலிருந்து மீள்விக்கப்பட்டது