பக்கம்:மேனகா 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

269


அதற்குள் கட்டுக்கடங்காத கோபத்தைக் கொண்ட பெருந்தேவியம்மாள், “அடியாமே அடி! உங்கள் வீட்டு சேவகன் பெண்டாட்டியென்று நினைத்துக்கொண்டாயோடி நாறமுண்டை! யாரைப் பார்த்து அடி என்கிறாய்? அதற்குள் அந்தக் கட்டையிலே போவான், மொட்டைச்சி மாதிரி அம்மிக்குழவியைத் தூக்கிக்கொண்டு ஓடி வருகிறானே! போங்கள் வெளியில், ஜாதிகெட்ட பிணங்களா! உங்களை யார் இங்கே பாக்கு வைத்து அழைத்தது? பேத்தியை நாடகக்காரப் பயலுக்குக் கூட்டிக்கொடுத்த தாய்க்கிழவி முண்டைக்கு இவ்வளவு அகங்காரமா! வீட்டைவிட்டு மாரியாதையாக வெளியிலே போகிறாயா? சந்தனாபிஷேகம் பண்ணட்டுமா?” என்று கூறி தைதாவென்று தாண்டிக் குதித்து இலங்கணி அவதாரம் எடுத்தாள்.

அந்த விபரீதத்தைக் கண்டு மிகவும் அச்சமடைந்த சாமாவையர் நடுவில் விழுந்து, “அண்ணா! வாருங்கள் வெளியில் போவோம்; இது சுத்த அசடு; இவளோடு சண்டையிடுவது நமக்குத்தான் அவமானம்; அம்மாவைக் கூப்பிடுங்கள். நம்முடைய அகத்துக்குப் போவோம், வாருங்கள் பாட்டியம்மா! இது நன்றாக இல்லை; வாருங்கள் வெளியில் போவோம்” என்று வற்புறுத்தினார். ஆகாயமோ பூலோகமோ வென்பது தெரியாமல், தம்மை முற்றிலும் மறந்து நின்ற சாம்பசிவம், அம்மாளுடைய கையைப் பிடித்து அழைக்க, அவள் கடைசியாக, “பெருந்தேவியம்மா! கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷயாத்தால் அதை ஜீரணம் செய்யப் பார்க்கிறாயா! அது எங்களிடம் பலிக்காது; இரு இரு இதோ ஒரு நிமிஷத்தில் உன் சூதைக் கண்டுபிடிக்கிறோம்” என்று சொல்லி விட்டு வர, மூவரும் வீட்டிற்கு வெளியில் வந்தனர்.

அப்போது சாமவையர், “அண்ணா! இவளுடைய குணம் உங்களுக்கு எப்போதும் தெரிந்ததுதானே. நீங்கள் இதைப் பாராட்டி மனவருத்தப் படவேண்டாம்; நாம் பாலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/287&oldid=1251372" இலிருந்து மீள்விக்கப்பட்டது