பக்கம்:மேனகா 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

277

சாமாவையரிடம் கேட்க, அவர் உடனுக்குடனே அந்த சம்பாஷணையை மொழிபெயர்த்து வந்தார். கனகம்மாளின் மனமும் மெய்யும் ஆத்திரத்தினாலும், வியப்பினாலும் அவமானத்தினாலும் படபடத்து நின்றன. சாம்பசிவையங்கார் கமிஷனரைப் பார்த்து, “என்ன ஆச்சரியம்! இந்த உத்தரவு எனக்குச்சம்பந்தப்பட்டதுதானா? நன்றாகப் பாருங்கள். இந்தக் குற்றங்களில் எதையும் நான் செய்யவில்லையே!” என்றார். கமிஷனர் துரையேனும் மற்ற போலீஸாரேனும் அவர் சொன்ன சொல்லைச் சிறிதேனும் மதிக்கவில்லை. கையுங்களவுமாகப் பிடிபடும் திருடன்கூட தாம் குற்றம் செய்யவில்லையென்று சொல்வதைக் கேட்டுப் பழகிய போலீஸார் புத்திக்கு சாம்பசிவம் அதே வேஷத்தான் போடுவதாகத் தோன்றியது. ஆகையால், கமிஷனர் அவரைப் பெருத்த அயோக்கிய சிகாமணியாகவே மதித்தாராயினும், வெளிக்கு மாத்திரம் மரியாதை காட்டி, “கலெக்டர் சொல்வது பொய்யோ, டிப்டி கலெக்டர் சொல்வது பொய்யோ; அது தானே பின்னால் விளங்குகிறது. எனக்கு அவர் கொடுத்த வேலையைச் செய்ய நான் கடமைப் பட்டவன். இதோ தந்தியை நீங்களே பாருங்கள்” என்று கூறியவண்ணம் தந்தியின் கீழ்பாகத்தை மறைத்துக்கொண்டு முற்பகுதியைக் காட்டினார். அது உண்மைத் தந்தியாகவே காணப்பட்டது; தஞ்சாவூர் கலெக்டரிடத்திலிருந்தே வந்திருந்தது. அதன்தன் வாசகமும் கமிஷனர் படித்தபடியே இருந்தது; சாம்பசிவம் சிறிது யோசனை செய்தவராய், “உம் நடக்கட்டும்; எல்லாம் காலவித்தியாசம்; என்னென்ன சம்பவிக்கிறதோ பார்க்கலாம். இப்போது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார்.

துரை அவருடைய வேதாந்தப் பேச்சைக் கேட்டுப் புரளியாகப் புன்னகை செய்து, “இந்த முற்பாதியின் நகல் ஒன்று வேறு காகிதத்தில் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதில் என்னுடைய கையெழுத்தும் செய்திருக்கிறேன். அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/295&oldid=1251383" இலிருந்து மீள்விக்கப்பட்டது