பக்கம்:மேனகா 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

மேனகா

பெற்றுக்கொள்ளுங்கள். ‘சென்னை ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் நானே நேரில் கமிஷனரிடம் இதன் முற் பகுதியான உத்தரவைப் பெற்றுக்கொண்டேன்’ என்று தந்தியின் பின்புறத்தில் எழுதிக் கையெழுத்துச் செய்து அதில் உங்களுடைய பெருவிரல் ரேகையை அழுத்துங்கள்; அவ்வளவே, வேறொன்றுமில்லை. அதன்பிறகு உங்களுக்கு விருப்பமான இடத்துக்கு நீங்கள் போகலாம்” என்றார்.

அதைக்கேட்ட சாம்பசிவம் தம்மை மறந்த நிலைமையில், கமிஷனர் சொன்னபடி செய்துவிட்டு; உத்தரவுக் காகிதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, துரையிடம் சொல்லிக்கொள்ள வேண்டுமென்னும் மரியாதையையும், தமது தேகத்தையும் முற்றிலும் மறந்து நேராக வெளியிற் போய் வண்டியில் ஏறிக்கொண்டார். வண்டி ஒட்டப்பட்டது. மூன்று உலகங் களையும் எரித்த ஈசனது கோபத்தையே, அவ்விருவரின் கோபத்திற்கு இணைசொல்லவேண்டும். அன்றி, வேறு எந்த கோபமும் அந்தச் சமயத்தில் இணைசொல்லத் தகுந்ததல்ல. தாங்கள் வண்டியிற் செல்வதாக அவர்களுக்குத் தோன்ற வில்லை. ஆகாயத்தில் பறப்பதாகவே நினைத்துக் கொண்டனர். அவர்களுடைய மனதிலிருந்து பொங்கியெழுந்து உலகத்தை யெல்லாம் மூடிய உணர்ச்சியைக் கோபம் என்பதா, துயரம் என்பதா, விபத்து என்பதா என்ன வென்பது? யாவும் இருந்தனவென்றே சொல்லவேண்டும். மிதமிஞ்சிய கொதிப்பில் அவர்களுடைய நிலைமை கட்டுக்கடங்காமல் போயிற்று, வாய் திறந்து பேசவும் வலுவற்றவராய்ப் போயினர். ஐந்து நிமிஷ நேரத்தில் வண்டி வைத்திய சாலையின் வாசலில் நின்றவுடன், சாமாவையர் “இறங்குங்கள்” என்ற பிறகே, அவ்விருவரும் தமது உணர்வைப் பெற்றுக் கீழே இறங்க, மூவரும் உட்புறம் நுழைந்தனர். அப்போது அகாலமாய்ப் போனமையால், பிணியாளிகளிடம் போகக் கூடாதென்று சேவகன் அவர்களைத் தடுத்துவிட்டான். என்ன செய்வது என்பதைப்பற்றி சாம்பசிவம் யோசனை செய்தார். மற்றவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/296&oldid=1251384" இலிருந்து மீள்விக்கப்பட்டது